தேசிய பொருளாதாரச் சமூக வளர்ச்சித் திட்டமானது, குறிப்பிட்ட காலத்தில் பொருளாதாரத்தின் முக்கிய நிகழ்வுகள், அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, சமூக வளர்ச்சி ஆகிய துறைகளில் அரசு வகுக்கும் வரைவு மற்றும் ஏற்பாடுகள் ஆகும். இந்தத் திட்டம், நீண்டகாலத் திட்டம், இடைக்காலத் திட்டம், ஆண்டுத் திட்டம் என்ற வகைகளில் அடங்கும்.
ஐந்தாண்டுத் திட்டம், நீண்டகாலத் திட்டமாகும். இதன் முழு பெயர், சீன மக்கள் குடியரசின் தேசிய பொருளாதாரச் சமூக வளர்ச்சியின் ஐந்தாண்டு வரைவுத் திட்டம் ஆகும். தேசத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள், உற்பத்தித் திறன் முதலான துறைகள் குறித்த வரைவுகள் இத்திட்டத்தில் வகுக்கப்படும். இத்திட்டமும், தேசிய பொருளாதாரச் சமூக வளர்ச்சியின் தொலைநோக்கு இலக்குகளையும் திசையையும் காட்டுகின்றது.
1953ஆம் ஆண்டு, சீனாவின் முதலாவது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது முதல் இத்தகைய திட்டத்தில் திட்டவட்டமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 11-வது ஐந்தாண்டுத் திட்டம் முதல், இந்த திட்டத்தில் திட்ட வரைவுகள் முக்கியமாக இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு வரை, சீனாவில் 12 ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்போது, உங்கள் மனத்தில் கேள்வி எழுந்துள்ளது. அதாவது, சீனாவின் ஐந்தாண்டு வளர்ச்சி திட்டம் எப்படி உருவாக்கப்படும்?
முதலில், நீண்டகால வளர்ச்சி திட்ட வரைவுகள் முன்னதாக வகுக்கப்படும். அடுத்து, கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் நடைமுறையாக்கம், சமூக வளர்ச்சித் தேவையின் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் திட்ட வரைவு இயற்றப்படும். அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளின் படி, திட்ட வரைவு திருத்தப்பட்டு முழுமைப்படுத்தப்படும். இதற்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு அமர்வுக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு ஆவணம் உருவாக்கப்படும். கடைசியில், இந்த திட்ட வரைவு ஆவணம், சீனத் தேசிய மக்கள் பேரவைக்கு வழங்கப்பட்டு, இப்பேரவைக் கூட்டத் தொடத்தில் விவாதிக்கப்ப்ட்டு வாக்கெடுப்பதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்தால், ஓர் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்ட வரைவு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படும்.
2016ஆம் ஆண்டு சீனாவின் 13-வது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் செயல்படும் முதல் ஆண்டு. மேலும், இத்திட்டத்தில், ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்கும் இலக்கு நிறைவேற்றப்படும். எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியானது.