மனித நூலகம் என்ற தலைப்பு வித்தியாசமாக உள்ளதா. ஆம், இதுதான் அந்த நூலகத்தின்பெயர். அது, டென்மார்கில் உள்ளது. பொதுவாக நூலகங்களில், பல எழுத்தாளர்களது நூல்களைக் காண முடியும். அந்த நூல்களைப் படிக்கும்போது எழுத்தாளரின் அனுபவம், அவரது கற்பனை என அவரைச் சுற்றியே நமது கற்பனைத் தொடரும். இதற்குப் பதிலாக , வாசகர்களின் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையில் நேரடியாக பல்வேறு அனுபவங்களைக் கொண்ட பல்வேறு துறையினர்களிடம் பேசும் வகையில் இந்த மனித நூலகம் வசதி அளிக்கிறது.
இந்த நூலகத்துக்குச் சென்றால் முதலில் நமக்கு விருப்பமான, நாம் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பினைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், ஆலோசனைக் கூடப் பகுதிக்கு வாசகர் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு, நேரடியாக மனிதர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு புதிய அனுபவங்களைப் பெற முடியும்,
நாம் தேர்வு செய்யக் கூடிய தலைப்பு எத்தகையதாகக் கூட இருக்கலாம். உதாரணத்துக்கு, பழங்கதைகள், இராக் போர் வீரர், அனாதை சிறுவன், ஹாலோஹாஸ்ட் அனுபவம், ஒலிம்பிக் தடகள வீர்ர், உடல்பருமனான பெண், கிறிஸ்துவம் குறித்த கேள்விகள் என பல துறைகளையும் இந்த மனித நூலகம் கொண்டுள்ளது.
இந்த நூலகம் 2007ஆம் ஆண்டில், டென்மார்க் இளம் வயதினர்களால் தொடங்கப்பட்டது, வணிக நோக்கமில்லாதது. மனிதர்களுடன் நேரடியாக உரையாடி புதிய அனுபவத்தைப் பெறுவதுதான் இந்த நூலகத்தின் நோக்கம். பல்வேறு தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளவர்கள், அதனை வெளி உலகத்துக்குக் கூற வாய்ப்பில்லாதவர்கள் இந்த நூலகத்தின் வாயிலாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் முதன்முதலாக நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின், மனித நூலகம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் என 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.