உருவில் பெரியதாக உள்ள நெருப்புக்கோழி, மிதிவண்டி வீரர்களுடன் போட்டியிட்ட காணொளிக் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவில் இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சைக்கிள் பந்தய வீரர்கள், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களின் பின் புகைப்பட நிபுணர், இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் படம் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென, ஒரு நெருப்புக் கோழி அப்பந்தயத்தில் இணைந்து கொள்கிறது.
அது, சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீரர்களின் பின்னால் ஓடியது. ஆனால், வீரர்களை அதனால் பிடிக்க முடியவில்லை. சுமார் 1.15 நிமிடங்கள் அந்த நெருப்புக்கோழி அவர்களுடன் ஓடியது. அது ஏன் இப்பயந்தயத்தில் இணைந்தது என்று தெரியவில்லை. தங்கள் வாழும் பகுதிக்குள் இரண்டு வீரர்கள் வருகின்றனரா என்று எண்ணியதோ தெரியவில்லை. அதனால், இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற டூர் டீ பிரான்ஸ் பந்தயத்தில் பங்கேற்றால் இந்த நெருப்புக்கோழிக்கு பரிசு கிடைக்கும் என்று நகைச்சுவையாகவும் கூறப்படுகிறது.