அமெரிக்க டாலரில் முதன் முறையாக, ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மனியான ஹரியத் டப்மன்னின் புகைப்படம் இடம் பெற உள்ளது. இவர், 1820ஆம் ஆண்டுகளில் அடிமைத்தளையிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். அடிமையாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை விடுவிக்க பெரும் உதவி புரிந்தவர்.
டாலரில் இவரது புகைப்படம் இடம்பெறும் பட்சத்தில், கடந்த நூற்றாண்டில், டாலரில் இடம் பெற்ற முதல் பெண்மனி என்ற பெருமையையும் இவர் பெறுவார். இவரது புகைப்படம், 20 டாலர் மதிப்புள்ள தாளில் முன்னாள் அரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜேக்ஸனுக்குப் பதிலாக இடம் பெற உள்ளது.
அமெரிக்க டாலரில் அந்நாட்டின் வரலாறு அதிகம் இடம் பெறும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்தின் செயலர் தெரிவித்தார்.
டப்மனைத் தவிர, பல முக்கியமான பெண் தலைவர்களின் புகைப்படங்கள் 5 மற்றும் 10 டாலர் மதிப்புள்ள தாள்களில் இடம்பெற உள்ளது.
இந்தப் புதிய புகைப்படங்களைத் தாங்கி வரும் டாலர்கள் 2020இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலரில் பெண் தலைவர்களின் புகைப்படங்கள் அதிகம் இடம் பெறவில்லை என இளம் பெண் ஒருவர், அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுக்கு எழுதி கடிதத்தைத் தொடர்ந்து, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.