நட்பு என்ற வார்த்தைக்கு சாலச்சிறந்தவர் யார் என்று கேட்டால் மனிதர் என்று சொல்வதை விட நன்யறிவுடைய நாய் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்கு பழகியவரை. சூழ்நிலை காரணமாக மனிதன் கூட பிரிந்து விட முடியும். ஆனால், நாய் உள்ளிட்ட இன்ன பிற விலங்குகள் அவ்வாறு இல்லை. ஆனாலும் பிற விலங்குகளிடம் இல்லாத குணாதிசயம் நாய்களிடம் இருப்பதனால்தான், தனது உயிரை பணயம் வைத்து தனது உரிமையாளரைக் காப்பாற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
யானையைப் போல நாயினுடைய நினைவாற்றலும் அதிகம் என்று கூறப்பட்டு வருவது பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் அரங்கேறியுள்ளது. ஓர் இடத்தில் பிறந்து, அதிக அன்பையும் பாசத்தையும் செலுத்தி வளர்த்த நாய் பீரோ (PERO) ஒன்றை தனது நண்பருக்கு அளிக்கப்பட்ட நாய், சில நாள்களுக்குள்ளேயே தனது பிறப்பிடம் தேடி வந்து விட்டது.
அதுவும் ஏதோ சிறிய பயணம் என்று நினைத்து விட வேண்டும். பீரோ மேற்கொண்ட பயணம் 240 மைல் தொலைவாகும். கிட்டத்தட்ட 387 கிலோ மீட்டர். இது எப்படி சாத்தியம் என்பது அந்த நன்யறிவுடைய நாயுக்கும், கடவுளுக்கும்தான் தெரியும்.
கடந்த மார்ச் மாதம், பீரோவை அதன் உரிமையாளர் ஜேம்ஸ் கம்ப்ரியாவின் காகர்மௌத் எனும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். திடீரென கடந்த மாதம் 8 ஆம் தேதி ஜேம்ஸுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அதில், பீரோவைக் காணவில்லை என்ற செய்தி. இது ஜேம்ஸை அதிக வருத்தம் அடையச் செய்த்து.
12 நாள்களுக்குப் பிறகு ஓர் அதிசயம். ஏதோ ஒரு வேலைக்காக வீட்டை வெளியில் செல்ல எண்ணி கதவைத் திறந்தால் பீரோ. 12 நாள்களில் 387 கிலோ மீட்டர். நாள் ஒன்றுக்கு 32 கிலோ மீட்டர். இது எப்படி சாத்தியம் இன்னமும் தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக் கொண்டே உள்ளார் ஜேம்ஸ்.
இது குறித்து அவர் கூறுகையில், இச்சம்பவம் எனக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை எப்படி பீரோ சாத்தியப்படுத்தியது என்ற யூகம் கூட எனக்குக் கிடையாது. அதனுடைய மூளையில், கண்டிப்பாக செயற்கைக் கோள் வழிகாட்டி இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 32 கிலோ மீட்டர். எத்தனை வழிதடங்களைக் கடந்து அது வந்திருக்க வேண்டும். எத்தனை எத்தனையோ வழிகள், மேடு, பள்ளங்கள். எல்லாவற்றையும் கடந்து எப்படி எனது வீட்டை அடைந்தது. இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக உள்ளது என்றார்
ஜேம்ஸின் மனைவி ஷான் பீரோவின் பாசத்தைப் பார்த்து வியந்து போனார். சிறப்பு உணவை அதற்கு வைத்து தனது வீட்டுக்குள் அழைத்துக் கொண்டார்.
அவர் கூறும்போது, பீரோ தனது பூர்வீக இடத்துக்கு திரும்பி, குடும்ப உறுப்பினர்களையும் அதன் நண்பர்களையும் மீண்டும் அடைந்ததில் அதற்கு கொள்ளை மகிழ்ச்சி. எங்களிடம் நிறைய நாய்கள் உள்ளன. எங்களது நண்பர், ஆட்டு மந்தையை காப்பதற்கு ஒரு நாய் வேண்டும் என்று கேட்டார். அப்போது பீரோதான் அதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனைத் தொடர்ந்து, மார்ச் திங்களில், சோதனை முறையில் பயன்படுத்த பீரோவை அவர்களுடன் அனுப்பினோம். அதன்பின், கடந்த மாதம் 8ஆம் தேதி பீரோவைக் காணவில்லை. அதனை எங்கு தேடியும் காணவில்லை என்ற செய்தி எங்களை ஆழ்ந்த வருத்த்த்தில் ஆழ்த்தியது. பிறகு ஒருநாள் எனது கணவர் பிற நாய்களை பராமரிக்கச் செல்லும்போது வீட்டுக் கதவின் முன் மலர்ந்த முகத்துடன், ஏங்கிய பார்வையுடன் பீரோ உட்கார்ந்து கொண்டிருந்த்து. எனது கணவரைக் கண்டவுடன், பீரோ பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு சந்தோஷம் கொண்டது.
ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நாயைக் கொண்டு விட்டு விட்டு வந்தால், அது மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து விடும் என்ற செய்தியை நாங்கள் அறிவோம். ஆனால் 386 கிலோ மீட்டரிலிருந்து வீட்டுக்கு வருவது என்பது நிகழ வாய்ப்பே இல்லாத்து. ஆனால் நிகழ்ந்து விட்டது என்று தெரிவித்தார். அது வீட்டை அடைந்தபோது, அதன் உடல் இழைத்துப் போகவில்லை. சோர்வாகவும் தென்படவில்லை. அதனால், வரும் வழி முழுவதும் தனக்கான உணவை அது யாரிடம் இருந்தோ பெற்றுக் கொண்டே வந்துள்ளது என்று தெரிவித்தார்.