1976ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் நாள் விடியற்காலை சீன ஹேபெய் மாநிலத்தின் தாங்சான் நகரில் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 இலட்சத்து 40ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் காயமடைந்தனர். நூறு ஆண்டு வரலாறுடைய இந்த தொழிற்துறை நகரம் சில நிமிடங்களில் தரைமட்டமாக மாறியது.
இவ்வாண்டு இந்நிலநடுக்கம் நிகழ்ந்த 40ஆவது ஆண்டு நிறைவாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் தாங்சான் நகரிலுள்ள நிலநடுக்க நினைவுப் பூங்காவுக்குச் சென்று, மலர் அஞ்சலி செலுத்தினார். பிறகு தாங்சான் நல ஆக்க மையத்திலுள்ள மக்களைச் சந்தித்தார்.
இந்நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்ததால் உறுப்பு அகற்று அறுவை சிகிச்சை பெற்றனர். தற்போது அவர்கள் தாங்சான் நல ஆக்க மையத்தில் வசித்து வருகின்றனர். ஷி ச்சின்பிங் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து கூறியதாவது
தாங்சான் நிலநடுக்கம் சீன தேசம் சந்தித்த கடும் இயற்கை சீற்றங்களில் ஒன்றாகும். இதில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்துக்குப் பின் சீன மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, மதிப்புமிக்க எழுச்சியை வெளிப்படுத்தினர். 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த எழுச்சியை நாம் நன்றாக நினைவு கூர்ந்து தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். உங்களிடத்திலுள்ள ஆற்றலையும் அற்புதத்தையும் கண்டுள்ளேன் என்று அவர் கூறினார்.
இம்மையத்திலுள்ள மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஷி ச்சின்பீங் நன்றி தெரிவித்தார். குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைக் கட்டியமைப்பதில் மருத்துவ சிகிச்சை இலட்சியமும் மாற்றுதிறனாளி பணியும் முக்கிய பங்குகளாகும். இப்பணியைத் தொடர்ந்து செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று ஷீ ச்சிந்பீங் அவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.
இன்றைய தாங்சான் நகரம், நிலநடுக்கத்துக்குப்பின் கட்டப்பட்டு, புதிய நவீனமயமாக்க நகரமாக மாறியுள்ளது. வடகிழக்கு ஆசிய பிரதேசத்திலுள்ள பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்மாதிரி நகரமாகவும், போஹாய் கடற்பரப்பிலுள்ள தொழில் மயமாக்க தளமாகவும், தலைநகர் பொருளாதார வளையத்தின் முக்கிய பகுதியாகவும் தாங்சான் மாற வேண்டும் என்று 2010ஆம் ஆண்டில் ஷி ச்சின்பிங் இந்நகரில் பயணம் செய்த போது கோரிக்கை விடுத்தார். நடப்புப் பயணத்தில் அவர் தாங்சான் நகரில் வளர்ச்சியை சோதனையிட்டு, தற்போதைய தாங்சான் நகரத்தை மேலும் அழகாக கட்டியமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.