சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கும் மியன்மாரின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சியும் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அன்று மாலை, லீ கெச்சியாங் ஆங் சான் சூச்சிக்கு வரவேற்பு விழாவை நடத்தினார். மியன்மார் அரசு ஆலோசகராக பதவியேற்ற பிறகு, ஆங் சான் சூச்சி ஆசியான் இவ்வாண்டு நாடுகளைத் தவிரவும் மேற்கொண்டுள்ள முதலாவது பயணம், சீனப் பயணமாக திகழ்கிறது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள லீ கெச்சியாங், இப்பயணம் மியன்மார் அரசு மற்றும் அரசு ஆலோசகரான ஆங் சான் சூச்சி, சீன-மியன்மார் உறவில் மிகுந்த கவனம் செலுத்துவதாக கூறினார். லீ கெச்சியாங் மேலும் கூறியதாவது
சீன-மியன்மார் நட்புறவில் சீனா எப்போதும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மியன்மாருடன், பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து வளர்த்து, இரு நாட்டுறவை புதிய கட்டத்திற்கு முன்னெடுக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ள சீனா விரும்புகிறது. இப்பயணம், இரு தரப்புறவுக்கு புதிய உந்து சக்தியை கொண்டு வரும் என்று நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தார்.
தத்தமது வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்களை ஒருங்கிணைத்து, முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வகுக்க வேண்டும் என்றும், சீன-மியன்மார் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய், மிட்சான் அணை ஆகிய பெரிய திட்டப் பணிகளுக்கான ஒத்துழைப்பை உரியமுறையில் நடைமுறைப்படுத்தி, அடிப்படை வசதிக் கட்டுமானம் மற்றும் ஒன்றை ஒன்று இணைக்கும் நிலையை உயர்த்த வேண்டும் என்றும் லீ கெச்சியாங் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினார்.
சீனாவுடனான உறவை வளர்ப்பதில் மியன்மாரின் புதிய அரசு மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், மியன்மாரின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்கு சீனாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஆங் சான் சூச்சி பேச்சுவார்த்தையில் கூறினார். அவர் மேலும் கூறியதாவது
தற்போது உலகின் நிலை, ஆழந்த மற்றும் சிக்கலான மாற்றம் அடைந்துள்ளது. மியன்மார்-சீன உறவு மேலும் மேம்படவும் வளரவும் நாம் விரும்புகின்றோம். இப்பயணமானது, வெற்றி அடையும் என்றும், இரு நாட்டு மக்களிடையே நட்பு உணர்வை மேம்படுத்த இப்பயணம் உதவும் என்றும் நம்பிக்கை கொள்கின்றேன்.
ஆசியான்-சீன பேச்சுவார்த்தை நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, ஆசியான்-சீன உறவு தொடர்ச்சியாக வளர்வதை முன்னெடுக்க மியன்மார் விரும்புவதாக ஆங் சான் சூச்சி குறிப்பிட்டார்.
சீன-மியான்மார் ஒத்துழைப்புத் துறைகளில் பல பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் உடன்பாட்டை எட்டியுள்ளனர் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லியு சென்மின் செய்தியார்களிடம் தெரிவித்தார்.