5 பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும், புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார சமூகங்களின் பிரதிநிதிகளாகவும் 20 நாடுகள் குழுவின் முக்கிய உறுப்பு நாடுகளாகவும் திகழ்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடங்கி, ஜி20 உச்சி மாநாட்டுக்கு முன் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்துவது வழக்கமாகியுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, முன்பை விட மேலும் வலுவான ஒத்த கருத்தை வெளிப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கமாகும்.
நடப்பு சந்திப்பின் போது, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் பற்றி மேலை நாடுகள் செய்த தாழ்வான மதிப்பீட்டுக்கு இந்த நாடுகளின் தலைவர்கள் வலுவான பதில் அளித்துள்ளனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அப்போது பேசுகையில், புதிதாக வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் நாடுகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் தலைமை ஆற்றலாகி விட்டன என்று வலியுறுத்தினார். பிரிக்ஸ் நாடுகளின் தகுநிலை, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான அவற்றின் முக்கிய பங்கு மீதான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ஒரு திங்களுக்குப் பின் கோவா மாநிலத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு இது சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது. பிரிக்ஸ் நாடுகள், 20 நாடுகள் குழு ஆகிய 2 முக்கிய மேடைகளை சீராகக் கட்டியமைத்து, பேணிக்காத்து, வளர்ப்பதில் கோவா உச்சி மாநாடு செவ்வனே செயல்படும் என நம்பப்படுகிறது.
2009ஆம் ஆண்டு முதல் இதுவரை, பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு 7 முறை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கடந்த உச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உஃபா அறிக்கை உள்ளிட்ட பணித்திட்ட ஆவணங்கள் பிரிக்ஸ் நாடுகளின் இடை மற்றும் நீண்ட கால ஒத்துழைப்புக்கு வழிகாட்டியுள்ளன. கோவாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவது தொடர்ந்து முக்கியமாக விவாதிக்கப்படும் அம்சமாகும்.
இந்நிலையில், கோவா உச்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் இந்திய திட்டம் பற்றி ஊகம் செய்யலாம். முந்தைய உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களைச் செயல்படுத்துவது, முக்கியமாக சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து ஒரே நிலைப்பாட்டை எடுப்பது, பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், எரியாற்றல் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளின் அடிப்படையில், புத்தாக்கம் மற்றும் அரசு சாரா பண்பாட்டுப் பரிமாற்றத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் மற்றும் புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார சமூகங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது ஆகியவை இந்திய திட்டத்தில் இடம்பெறக் கூடும்.