சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நடப்பு உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரை நிகழ்த்திய போது, உறுப்பு மற்றும் விருந்தினர் நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் நடப்பு உச்சி மாநாட்டில் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறி, உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடத்தினர். முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டு, பல சாதனைகளும் பெறப்பட்டுள்ளன. இவை பரந்தளவில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். இது குறித்து துருக்கி அரசுத் தலைவர் பேசுகையில்,
"ஹாங்சோ உச்சி மாநாடு, உலகப் பிரச்சினைகள் பற்றி விபரமாக விவாதித்த பயன்மிக்க கூட்டமாகும். உலகப் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில், சீர்திருத்தமானது விவாதிக்கப்பட்ட மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். புத்தாக்கம், ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் நிலைத்தன்மை உள்ளிட்டவை பற்றி பல்வேறு தரப்புகளும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன" என்று கூறினார்.
உலகப் பொருளாதார இடர்ப்பாடு மற்றும் சவால்களைப் பயனுள்ள முறையில் கையாள வேண்டிய நிலையில் நடத்தப்படும் இந்த உச்சி மாநாட்டின் மீது பல்வேறு தரப்புகள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளன. இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் லாகர்டெ அம்மையார் கூறுகையில்,
"உலகப் பொருளாதாரம் நீண்டகாலத்தில் குறைவான வேகத்தில் அதிகரித்து, சிறியளவு மக்களுக்கு நன்மை தரும் நிலையில் ஜி20 உச்சி மாநாடு நடத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி குறித்து, மேலும் பெரும் அதிகரிப்பு மற்றும் சகிப்புத்தன்மை என்ற உடன்பாடு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
நடப்பு உச்சி மாநாட்டில், ஜி20 அமைப்பின் உலக வர்த்தக அதிகரிப்புக்கான நெடுநோக்கு, ஜி20 அமைப்பின் உலக முதலீட்டுக்கான வழிகாட்டல் கோட்பாடு ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன. பல தரப்பு வர்த்தக அமைப்பு முறைக்கு ஆதரவளித்து, பாதுகாப்பு வாதத்தை எதிர்க்கும் வாக்குறுதி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நிதி அமைச்சர் மெய்ரெல்லேஸ் இம்மாநாட்டுக்குப் பின் பேசுகையில்,
"வர்த்தக திறப்பு, பிரேசில் உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என கருதுகின்றேன். பல்வேறு நாடுகளின் செயல்திறன் மற்றும் உற்பத்தி ஆற்றலின் உயர்வுக்கும் துணைபுரியும்" என்று குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதாரத்துக்கு சிறந்த திட்டங்களைத் தீட்டியுள்ளதோடு, ஜி20 அமைப்பின் வரலாற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான முதலாவது தலைவர் அறிக்கையும் நடப்பு உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.