• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சுற்றுலா துறை வளர்ச்சி
  2016-09-27 15:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

செப்டம்பர் 27ஆம் நாள் உலக சுற்றுலா நாளாகும். தற்போது சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் முக்கிய வழிமுறையாக பல நாடுகள் கருதுகின்றன. உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரத் துறையாக இது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே சென்று பெரிய உலகை நேரில் பார்க்க வேண்டும் என்ற வாக்கியம் தற்போது சீனாவின் இணையத்தில் மிக பரவலாக பரவி வருகின்றது. சுற்றுலா பொழுது போக்கு பற்றி தற்கால சீனர்களின் கருத்தை இது சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

நேரம் கிடைத்தால் பயணம் மேற்கொள்கின்றேன். வெளியே சுற்றி பார்க்கும் அதேவேளையில் உடல் பயிற்சி பெறலாம் என்று முதியோர் ஒருவர் கூறினார்.

நான் ஆண்டுக்கு ஓரிரு முறை வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றேன். தென் கிழக்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பேன் என்றார் ஒரு இளைஞர்.

சீனாவில் மக்களின் வாழ்க்கை தரம் இடைவிடாமல் உயர்ந்து வருவதுடன், சுற்றுலா பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டு முற்பாதியில், சீனாவில் உள்நாட்டில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 223.6 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகும். வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 12.7 கோடியாகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 4.1 விழுக்காடு அதிகம். இவ்வாண்டின் முதல் 6 திங்களில் சுற்றுலாத் துறை வருமானம் 2 இலட்சத்து 25 ஆயிரம் கோடி யுவான் ஆகும். கடந்த ஆண்டை விட 12.4 விழுக்காடு அதிகம்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுற்றுலா துறையின் பங்கு 10.8 விழுக்காடாகும் என்றும் இத்துறையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை மொத்த வேலை வாய்ப்புத் தொகையில் 10.2 விழுக்காடாகும் என்றும் சீனத் தேசிய சுற்றுலா ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அடுத்த 3 ஆண்டுகளில், சீனாவின் சுற்றுலாத் துறையில் நேரடி முதலீடு செய்யப்படும் தொகை 3 இலட்சம் கோடி யுவானுக்கு அதிகமாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஐ.நாவின் உலக சுற்றுலா அமைப்பு வழங்கிய தரவுகளின்படி, 2012ஆம் ஆண்டு, வெளிநாடுகளில் பயணம் செய்து பணம் செலுத்தும் மிக பெரிய நாடாக சீனா மாறியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக உலக சுற்றுலா வருமானத்துக்கு சீனா ஆற்றிய பங்கு 13 விழுக்காட்டுக்கு மேலாகும். உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் சிக்கிக்கொள்ளும் போது வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் பங்கிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் எண்ணிக்கை 60 கோடிக்கு அதிகமாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040