தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பான நடுவர் தீர்ப்பு வழக்கின் முடிவு வெளியான பிறகு, பயனுள்ள நடவடிக்கைகள் பலவற்றை சீனா மேற்கொண்டதால், இப்பகுதியின் நிலைமை ஓரளவு அமைதியான நிலையில் உள்ளது. ஆனால், இப்பிரதேசத்துக்கு அப்பாலுள்ள அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு, தென் சீனக் கடல் பிரச்சினைக்கு மேலதிக சிக்கல்களைக் கொண்டு வரும்.
ஆசிய-பசிபிக் பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சிலின் சீனக் குழுவின் துணைத் தலைவர் சியன் லிஹுவா பேசுகையில், தென் சீனக் கடல் பிரச்சினை, அரசுரிமை மற்றும் கடல் சார் உரிமை நலன்களுடன் தொடர்புடைய சர்ச்சைகளாகும் என்று கூறினார். இப்பிரதேசத்துக்கு அப்பாலுள்ள நாடுகளின் தலையீட்டை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் பல்வேறு தரப்புகளும் சிறந்த தீர்வுமுறையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல், தென் சீனக் கடற்பரப்பில், கண்காணிப்பு சுற்றுப் பயணத்தை அமெரிக்கா பல முறை மேற்கொண்டு வருகிறது. தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிட முயலும் அதன் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது. இப்பிரச்சினை தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் கருத்துவேற்றுமை, மேலும் பெரும் மோதலை ஏற்படுத்தும் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க அரசுத் தலைவரின் முன்னாள் பாதுகாப்பு விவகார உதவியாளர் ராபெர்ட் மெக்ஃபலென் பேசுகையில், கருத்து வேற்றுமையைத் தீர்க்க அமெரிக்காவும் சீனாவும் மேலும் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சூடான பிரச்சினைகள் குறித்த விவாதத்தில் கருத்து பரிமாற்றமும், எதிரெதிர் நிலையும் ஏற்பட்டன. ஆனால், சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த விவாதம் ஷியாங்ஷான் கருத்தரங்கில் தவிர்க்கபடவில்லை. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகள், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் துணைபுரியும் என்று சீன இராணுவ அறிவியல் கழகத்தின் சீன-அமெரிக்க பாதுகாப்பு உறவுக்கான ஆய்வு மையத்தின் தலைவர் சௌ சியௌச்சுவோ கருத்து தெரிவித்தார்.