ஷென்சோ-11 விண்கலம் 17ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது பறக்கும் பாதையை 5 முறை மாற்றிய பின்னர், தியன்கோங்-2 விண்வெளி ஆய்வகத்துடன் அது வெற்றிகரமாக இணைந்தது.
விண்வெளி ஆய்வகத்துக்குள் நுழைந்த பின் ஜிங் காய் ஃபெங், சென் துங் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.
ஷென்சோ-11 விண்கலத்தில் ஒளியியல் படிம உணரி பொருத்தப்பட்டுள்ளது. விண்கலங்களின் இணைப்பு ஆற்றலை இது பெரும் அளவில் அதிகரித்துள்ளது என்று ஷென்சோ-11 விண்கலத்தின் தயாரிப்பு, வழிக்காட்டி மற்றும் கட்டுப்பாட்டுத் தொகுதியின் ஆணையாளர் ரோ குச்சிங் கூறினார்.
தியன்கோங்-2 விண்வெளி ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றி இந்த ஆய்வகத்தின் தலைமை வடிவமைப்பாளர் சூ சுங்பெங் விவரித்தார். அவர் கூறியதாவது
தியன்கோங்-2 விண்வெளியிலுள்ள சீனாவின் முதலாவது ஆய்வகமாகும். விண்வெளியில் இயங்குதல், சென்சோ-11 விண்கலத்துடன் இணைதல் ஆகிய கடமைகளை இது நிறைவேற்றியுள்ளது. விண்வெளி வீரர்கள் இதில் 30 நாட்கள் தங்கி பல ஆய்வுகளை மேற்கொள்வர். அடுத்த ஆண்டு தியன்கோங்-2 ஆய்வகம், சுற்றுவட்டப்பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் போது இது சரக்குகளை ஏற்றிச்செல்லும் விண்கலத்துடன் இணைந்து, திரவ எரியாற்றலைப் பெறும். மேலும் பழுதுப் பார்ப்பது உள்ளிட்ட சில தொழில் நுட்ப சோதனைகளை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மனிதனும் கணிணியும் தொடர்பு கொள்ளுதல், தாவர பயிரிடுதல், விண்வெளியில் மனிதரின் நுகர்ச்சித் திறன் மாற்ற விதி, புவி ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில் மனிதரின் ரத்த குழாய் மற்றும் இதயத்தின் செயல் திறன், விண்வெளியில் தங்கும் காலத்தில் வீரர்களின் கண்பார்வையில் ஏற்படும் மாற்றம் முதலிய ஆய்வுகள் தியன்குங்-2 ஆய்வுக்கலத்தில் மேற்கொள்ளப்படும்.