சீனத் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலத்திட்ட ஆணையத்தைச் சேர்ந்த இடம்பெயரும் மக்கள் விவகாரப் பிரிவின் தலைவர் வாங் ச்சியேன் கூறியதாவது
அடுத்த 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை, சீனாவில் மக்களின் இடம்பெயரும் போக்கு இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பகுதிகள் மக்கள் தொடர்ந்து இடம்பெயரும் முக்கிய இலக்காக உள்ளன. மத்திய பகுதியிலும் மேற்கு பகுதியிலும் மக்கள் முக்கியமாக மாநிலத்துக்குள் இடம்பெயர்ந்து வருகிறனர். அவர்களில் கிராமத்திலிருந்து விலகி நகரங்களில் வேலை செய்யும் மக்களின் விகிதாசாரம் தொடர்ந்து அதிகரிக்கும். மக்கள் இடம்பெயர்வது, சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குறிப்பாக பிரதேச பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று அவர் மதிப்பிட்டார்.
இடம்பெயர்வதன் தனிச்சிறப்பு பற்றி கூறுகையில், தற்போது இளம் தம்பதிகள் முதலில் வெளியூருக்குச் சென்று வேலை செய்கின்றனர். பிறகு குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். எண்ணிக்கையில் இது அதிகமாக உள்ளது. ஆகவே, குடும்பமாக இடம்பெயர்வது இக்காலத்தின் முக்கிய அறிகுறியாகும் என்று வாங் ச்சியேன் கூறினார்.
புள்ளிவிபரங்களின்படி, இடம்பெயர்ந்த மக்கள் சராசரியாக புதிய இடத்தில் 4 ஆண்டுகள் தங்கியுள்ளனர். அவர்களில் பாதி பேர் குடிபெயர்ந்த இடத்தில் நீண்டகாலமாக வாழ்வதை விருப்பமாகத் தெரிவித்துள்ளனர்.
தவிர, முன்னதாக இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். தற்போது முதியோர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. எனவே, இடம்பெயர்பவர்களுடைய குழந்தைகளின் கல்வி, வீடு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளுக்கான கொள்கைத் தேவை அதிகரித்து வருகின்றது.
முன்னதாக இடம்பெயர்ந்து வேலை செய்யும் தனிநபருக்கான கொள்கைகளை வகுத்திருந்தோம். தற்போது இடம்பெயரும் குடும்பம் குறித்து புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று வாங் ச்சியேன் தெரிவித்தார்.