பன்னாட்டு முதலீட்டு ஒத்துழைப்பு உலகப் பொருளாதார வளர்ச்சியை முக்கியமாக விரைவுப்படுத்தும் துறையாகும். பன்னாட்டு முதலீட்டு ஒத்துழைப்பில் சீனா செயலாக்கமுறையில் பங்கெடுத்து இதை முன்னேற்றி வருகிறது. புள்ளிவிபரங்களின்படி 2015ஆம் ஆண்டு, வெளிநாடுகளில் சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை 14ஆயிரத்து 570 கோடி அமெரிக்க டாலரை எட்டி உலகில் 2ஆம் இடத்தில் உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு முதலீட்டுத் தொகையின் மொத்த அளவு 72 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டக் கூடும் என்று சீன துணைத் தலைமை அமைச்சர் வாங்யாங் தெரிவித்துள்ளார். முதலாவது பன்னாட்டு உற்பத்தி ஆற்றல் ஒத்துழைப்பு கருத்தரங்கு மற்றும் 8ஆவது சீன வெளிநாட்டு முதலீட்டுக்கான பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் அவர் மேலும் கூறியதாவது,
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியை முக்கியமாகக் கொண்டு, வெளிநாட்டு முதலீட்டை வரவேற்கும் அதேவேளையில் வெளிநாடுகளில் முதலீடு செய்வதிலும் ஈடுபடுவோம். உற்பத்தி ஆற்றல் துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேற்கொண்டு, மேலும் உயர் தரமான வெளிநாட்டுத் திறப்புப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்து வருகின்றோம் என்று அவர் கூறினார்.
உற்பத்தியாற்றல் துறையில் கசகஸ்தான், கம்போடியா, எகிப்து உள்ளிட்ட 20க்கும் அதிகமான வளரும் நாடுகளுடன் சீனா இரு தரப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா முதலிய வளர்ந்த நாடுகளுடன் 3ஆவது தரப்புச் சந்தை ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. மேலும், சீன-லத்தீன் அமெரிக்க நாடுகள், சீன-ஆப்பிரிக்க நாடுகள், சீன-கசகஸ்தான் முதலிய பல தரப்பு மற்றும் இரு தரப்பு உற்பத்தியாற்றல் துறை ஒத்துழைப்புக்கான நிதியத்தை சீனா ஆரம்பித்துள்ளது.
வெளிநாடுகளில் சீனாவின் முதலீட்டுடன், உள்ளூரில் பத்து இலட்சத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, கோடிக்கணக்கான அமெரிக்க டாலர் வரி செலுத்தப்பட்டுள்ளது.
சீன வெளிநாட்டு முதலீட்டுக்கான பேச்சுவார்த்தையில் 100க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வணிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தவிர, தங்களது நாட்டின் மேம்பாட்டை பரப்புரை செய்து சீனாவின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் சீனாவிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலர்களும் இதில் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொண்டுள்ளனர்.