ஒரு நாட்டிற்குள்ளேயே, சாலை வழியாக நீண்ட தூரம் பயணித்து புதிய சாதனையை உருவாக்கியுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி கிரேக் கேயே மற்றும் ஹூதர் தாம்ப்ஸன். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் சாலை வழியே கடந்து புதிய பதிவை உருவாக்க வேண்டும் என்று எண்ணி இத்தம்பதி இப்பயணத்தைத் தொடங்கியது. 39 மாகாணங்களின் வழியாக 29,500 மைல் தொலைவு பயணித்து, இதற்கு முன் இந்தியாவில் 4 ஆண்களால் படைக்கப்பட்ட சாதனையை இத்தம்பதி முறியடித்தது.
டோனி ராப்பிஸ் என்பவருடைய "உள்ளிருக்கும் ஆற்றல் வாய்ந்தவனை எழுப்பு" என்ற பாடல் தொகுப்பை கேட்டுக் கொண்டிருந்தபோது, புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தம்பதி இருவரும் தங்களது வேலைகளை உதறிவிட்டு, சாகசம் புரிவதற்கான ஆயத்தப் பணியில் களமிறங்கினர். என்ன செய்வது என்று அப்போது தெரியவில்லை. பின்னர், இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகள் பலவற்றையும் அவர்கள் அலசினர். அதில், தங்களால் முடியும் என்று கருதியது இந்த சாலைப் பயணம் தான்.
தனது மகிழுந்துக்கு புதிய சக்கரங்கள், புதிய புகைப்படக் கருவி என பல ஆயத்தங்களையும் செய்து கொண்டு வாகனத்தின் விசைப் பொறியை இயக்கியது இத்தம்பதி.
புறப்படும் முன், பயண அனுபவம் குறித்து அன்றாடும் குறிப்பு எழுதுவது, அனுதினமும் 10 நிமிடங்கள் ஓடக் கூடிய நிகழ்படத்தை பதிவு செய்வது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, பயண நேரத்தைத் தவிர, பிற நேரங்களில் நல்ல ஓய்வும், தேகத்துக்கு ஊட்டச் சத்து அளிக்க்க் கூடிய உணவும் எடுத்துக் கொள்வது என பல கட்டுப்பாடுகளை இவர்கள் தங்களுக்கு விதித்துக் கொண்டனர்.
சுமார் 103 நாள்கள் நீடித்த பயணத்தில் பல்வேறு புதிய அனுபவங்களையும் புதிய மனிதர்களையும் சந்தித்த்து பயணக் களைப்பை நீக்கியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். செல்லும் வழியில் ஏதேனும் நிறுவனங்களின் விளம்பரப் பணியை ஏற்று புரிந்த்து, புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்டது உள்ளிட்ட செயல்களால் பயண செலவுக்கான தொகையை இத்தம்பதி ஈட்டியது. இவர்கள், ஏற்கெனவே புதிய உலக சாதனையை எட்டி விட்டாலும், நவம்பரிலும் பயணத்தைத் தொடர்வதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.