மத்தியப் பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சௌபெய், தனது முதுகெலும்பின் உதவியுடன் மகிழுந்தை இழுத்த செய்தி சர்வதேச ஏடுகளில் எல்லாம் உசிதமாகப் போற்றப்பட்டு வருகிறது. முதுகில் உள்ள இரு பெரிய எழும்புகளுக்கு மத்தியில் கட்டை ஒன்றின் உதவியுடன் அவர் இந்த செயலைப் புரிந்துள்ளார். கட்டையில் கம்பி ஒன்று பிணைக்கப்பட்டு, அக்கம்பயின் மறுமுனை வாகனத்தில் கட்டி இழுத்துள்ளார். 18 வயதில் அபிஷேக் இந்த சாகச செயலை புரிந்த்து அவரது பெற்றோருக்கும், அவரது ஊருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
8 வயதாக இருக்கும்போது, முதுகெலும்பின் உதவியுடன் சிறு சிறு பொருள்களை இழுக்கும் திறனை இவர் பெற்றார். இதனைக் கண்ட அவரது தந்தை, முதுகெலும்புக்கு நடுவில் வைக்கும் வடிவில் இலகுவான கட்டை ஒன்றை வடிவமைத்து மகனுக்குப் பரிசளித்தார். இதனைக் கொண்டே, ஒரு மிகழுந்து, இரு மகிழுந்துகளை இழுத்து, சுய சோதனையில் வெற்றி கொண்டார்.
இது குறித்து அபிஷேக் கூறுகையில், காதுகளாலும், முடிகளாலும் பலரும் வாகனங்கள் இழுப்பதை நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், முதுகெலும்பில் இரு வாகனத்தை ஒரே நேரத்தில் இழுத்த முதல்நபர் நான்தான். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இச்செயலைப் புரியும் அபிஷேக், ஒல்லியான தேகம் கொண்டவர். ஆனால், முதுகெலும்பின் வலு அதிகம். இத்தகைய செயல்களை அவர் புரிவதால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால். அபிஷேக்கைப் போன்றே அவரது நண்பர்கள் சிலர், முயற்சியில் ஈடுபட்ட போது சிக்கலில் மாட்டிக் கொண்டு, மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது.
இது குறித்து அவரது தந்தை கூறும்போது, அவரது விருப்பம் போலவே, சாதனை கின்னஸில் இடம்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ந்து, கல்வியை அவர் தொடர வேண்டும். விமானத்தை இழுக்க அவர் விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம் என்று அடுத்த சாகசத்துக்கு அடித்தளம் இடுகிறார்.