• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மேற்கொள்ளவுள்ள லத்தீன் அமெரிக்கப் பயணம்
  2016-11-10 16:00:23  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் நவம்பர் 17ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை ஈக்வடோர், பெரு, சிலி ஆகிய மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். பெருவின் தலைநகர் லீமாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 24ஆவது தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார்.

சீனாவும் ஈக்வடோரும் 2015ஆம் ஆண்டு நெடுநோக்கு கூட்டாளியுறவை ஏற்படுத்தியது. ஈக்வடோரின் 3ஆவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடாகவும், முக்கிய முதலீட்டு நாடாகவும் சீனா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக எரியாற்றல், மின்னாற்றல், தாது வளம் ஆகிய துறைகளில் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் இரு நாட்டு ஒத்துழைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சீனத் துணை வெளியுறவு அமைச்சர் வாங் சாவ் கூறியதாவது

இரு தரப்புறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சனைகள் பற்றி ஈக்வடோர் அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பீங் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி கொள்வார். இரு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடும். உற்பத்தி ஆற்றல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், நிதி, நீதித் துறை, பண்பாடு, செய்தி முதலிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு பற்றி பல ஆவணங்கள் எட்டப்படும். இப்பயணம் மூலம் இரு நாட்டுறவு மேலும் உயர் நிலைக்கு வளரும் என்று அவர் கூறினார்.

பெருவும் சிலியும் மிக முன்னதாக சீனாவுடன் தடையில்லா வணிக உடன்படிக்கைகளில் கையொப்பமிட்ட நாடுகளாகும். இதன் விளைவாக, சீனாவுக்கான இவ்விரு நாடுகளின் ஏற்றுமதி தொகை ஆண்டுக்கு 10 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வேகத்துடன் அதிகரித்து வருகின்றது. மேலும் இவ்விரு நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கின்றது. சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த பன்னாட்டு வர்த்தக பேச்சுவாத்தைக்கான துணைப் பிரதிநிதி சாங் சியாங்சேன் கூறியதாவது

அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் மேற்கொள்ளவுள்ள பயணத்தில் தடையில்லா வர்த்தக உடன்படிக்கையின் மேம்பாடு, தொழிற்துறை பூங்காவின் கட்டுமானம் ஆகியவை பற்றி சீனாவும் பெருவும் புதிய ஆவணங்களில் கையொப்பமிடும். சிலியுடன் தடையில்லா வர்த்தக உடன்படிக்கையின் மேம்பாடு மற்றும் மின்னணு வணிகத் துறையிலான ஒத்துழைப்பு பற்றி புதிய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளும் எட்டப்படும் என்று அவர் கூறினார்.

ஏபெக் கூட்டத்தின் போது, மண்டல ஒருமைப்பாடு, ஆசிய-பசிபிக் தடையில்லா வர்த்தக மண்டலம், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு பரிமாற்றம் செய்தல், சேவைத் தொழில் துறை ஒத்துழைப்பு முதலியவை பற்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆழமாக விவாதிப்பர் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040