• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாடுகளில் சீன தொழில் நிறுவனங்களின் முதலீடு
  2016-11-24 18:01:02  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா மற்றும் உலகமயமாக்கத்துக்கான மையம் ஆராய்ந்து தொகுத்த "2016ஆம் ஆண்டிற்கான சீன தொழில் நிறுவனங்களின் உலகமயமாக்கல் அறிக்கை" 23ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் சீன தொழில் நிறுவனங்களின் முதலீட்டுக்கு பொற்காலம் வருகிறது. உலகமயமாக்கத்துக்கு எதிரான நிலைமை தொழில் நிறுவனங்களின் உலகமயமாக்கப் போக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இவ்வறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் சீனாவின் நேரடி முதலீடு 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்த முதலீட்டுத் தொகை 14 ஆயிரத்து 567 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. சீன தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு இது பொற்காலமாகும். இவ்வறிக்கையின் தலைமை பதிப்பாசிரியரும், சீனா மற்றும் உலகமயமாக்கத்துக்கான மையத்தின் தலைவருமான வாங் ஹுய்யௌ கூறியதாவது—

"உலகமயமாக்கத்தில் சீனாவின் பங்கு, வெளிநாடுகளில் செய்யும் முதலீட்டில் நேரடியாகவும் மிக எளிமையாகவும் காணப்படலாம். 2015 முதல் 2016ஆம் ஆண்டு வரை, வெளிநாடுகளில் சீனாவின் நேரடி முதலீடு மூன்று சாதனைகளைப் பெற்றுள்ளது. முதலாவது, நிகர மூலதனம் ஏற்றுமதி செய்யும் நாடாக முதன்முறையாக சீனா மாறியுள்ளது. இரண்டாவதாக, உலகில் நேரடி முதலீடு செய்யும் நாடுகளில் சீனா ஜப்பானைத் தாண்டி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவதாக, அமெரிக்காவுக்கான சீனாவின் நேரடி முதலீடு சீனாவுக்கான அமெரிக்காவின் நேரடி முதலீட்டை முதன்முறையாகத் தாண்டியுள்ளது" என்று அவர் கூறினார்.

ஆனால் இதனிடையில், வர்த்தகப் பாதுகாப்பு வாதத்துக்கான அறிகுறிகள் சில நாடுகளில் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது, அமெரிக்காவின் புதிய அரசுத் தலைவர் தெரிவித்த சில கருத்துக்கள் ஆகியவை உலகமயமாக்கத்துக்கு எதிரான கூற்றை வலுப்படுத்தியுள்ளது. இது குறித்து சீனா மற்றும் உலகமயமாக்கத்துக்கான மையத்தின் துணைத் தலைவர் ஹே வெய்வென் கூறுகையில்—

"உலகமயமாக்கம் மாற்றப்பட முடியாதது. அது, பொருளாதார விதி ஒன்றாகும். மேற்கட்டமைப்பு எவ்வாறு மாறினாலும், பொருளாதார விதியை மாற்ற முடியாது" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஒத்துழைப்புத் திட்டம், நெடுகிலுள்ள நாடுகளின் கூட்டு வெற்றியை விரைவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது. முதலீடு அளிக்கப்படும் நாடுகளின் பொருளாதார எதிர்காலம் குறித்து, விசாரணை செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களில் 73 விழுக்காட்டு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 44 விழுக்காட்டு நிறுவனங்கள் முதலீட்டை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவிலுள்ள சீன பொது வணிகச் சங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலர் ஹுவாங் சுயேசீ கூறுகையில்—

"பொருளாதார வளர்ச்சியுடன், எதிர்காலத்தில் சீன தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் அளவு மேலும் விசாலமாகவும் ஆழமாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040