• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
120 வயதில் யோகா செய்து அசத்தும் இந்தியர்
  2016-12-14 15:57:00  cri எழுத்தின் அளவு:  A A A   

புனித நகரான வாரணாசியைச் சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு, கடவுச்சீட்டில் அளிக்கப்பட்டுள்ள பிறந்த தேதியின்படி வயது 120. உடலுறவு வைத்துக் கொள்ளாததும், அனுதினமும் யோகா செய்வதும்தான் என்னுடைய நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று இவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிவானந்த குருவின் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள். இது உண்மையாக இருக்குமெனில் மூன்று நூற்றாண்டுகளைக் கண்டவர் என்ற பெருமையும், உலக அளவில் நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளவர் என்ற பெருமையையும் இவர் பெறுவார்.

கோவிலில் இருந்த ஆவணங்களை வைத்து இந்திய கடவுச்சீட்டு அதிகாரிகள் இவரது பிறந்த தேதியை உறுதி செய்துள்ளனர். அதனைத் தவிர, வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் இவரது உண்மையான வயது இதுவாகத்தான் இருக்கும் என நம்பப்படுகிறது.

இவரைப் பார்ப்பதற்கு 70 வயது முதியவரைப் போல் உள்ளார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள் கடந்த கோடைக்காலத்தின்போது செய்தி வெளியிடவே, தற்போது இவரைப் பற்றிய செய்திகள் உலக நாடுகளின் செய்தித்தாள்களில் இடம் பெற்று வருகின்றன.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளமைக்காலத்திலேயே துறவறம் பூண்டார். தொடர்ந்து, ஒழுக்கம், நல்ல உணவு முறை, யோகா என தனது உடலை தற்போதுவரை பேணி வருகிறார். சமீபத்தில் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் 2 மணி நேர யோகா சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியபோது, வேக வைக்கப்பட்ட, எண்ணெய் பயன்படுத்தாத உணவுப் பொருள்களைத்தான் உட்கொண்டு வருகிறேன். தினமும் தரையில்தான் படுத்து உறங்குகிறேன். தலையணை பயன்படுத்துவது இல்லை. அதற்குப் பதிலாக மரக்கட்டைகளைத்தான் பயன்படுத்தி வருகிறேன். சிறிய வயதாக இருந்தபோது, பல நாள்கள் உணவில்லாமல் உறங்கியுள்ளேன். பழங்கள், பால் உள்ளிட்டவற்றை உட்கொள்வதில்லை. அவை, ஆடம்பரமானவை என்ற எண்ணம் எனக்கு உண்டு என்று தெரிவித்தார்.

தனது நீண்ட ஆயுள் குறித்து சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய இவருக்கு ஆர்வம் இல்லை. ஆனால், சீடர்களின் வற்புறுத்துதலின் பேரில் தற்போது கின்னஸ் சாதனைக்கு இவர் விண்ணப்பித்துள்ளார். சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்த இவர், ஒரு சாமியாரின் தயவில் வளர்ந்துள்ளார். அதனால், இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு அறிய வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொண்டார்.

தனி நபராகவே தனது வாழ்க்கையை நகர்த்தி வரும் இவர், தற்போதும் கூட, தனியாகவே, ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அனுதினமும் யோகா என்பதால் மருத்துவமனைக்கு இவர் சென்றதே இல்லை. 120 வயதில்கூட, வஜ்ராசனம் செய்து காண்போரை வியக்க வைக்கிறார்.

சுதந்திர இந்தியாவுக்கு முன்பே இவர் பிறந்துள்ளதால், நாட்டில் ஏற்பட்ட பல மாற்றங்களை இவர் கண்ணாரக் கண்டுள்ளார். மின்சாரம், வாகனங்கள், தொழில்நுட்பங்கள் என பல வந்தாலும் அது அவரிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை. மேலும், முற்காலத்தில், மிகக் குறைவான பொருள்கள்தான் மக்களிடத்தில் இருந்தன. இருந்தபோதும் மகிழ்ச்சிக்குக் குறையில்லை. ஆனால், தற்போது, மக்களிடம் தேவைக்கு அதிகமான பொருள்கள் இருந்தும் மகிழ்ச்சியை எங்கேயோ தொலைத்து விட்டு வேறு எங்கேயோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று வாழ்க்கை த்த்துவத்தை சிவானந்தா குரு உதிர்க்கிறார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040