அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் கடந்த 20 ஆண்டுகளாக பச்சை நிற ஆடைகளை மட்டுமே உடுத்தி வருகிறார். நியூயார்க் பகுதியில் கலைத்துறையில் ஈடுபட்டு வரும் இவர், தலை முதல் கால் வரை உடுத்தும் அனைத்து ஆடைகளும் வெவ்வேறு அடர்த்தியிலான பச்சை நிறத்திலானவை. அவரைப் பொறுத்தவரை பசுமை என்பது மகிழ்ச்சி, உலகிலேயே மிகவும் நேர்மறையான நிறம். அதனால், பசுமையைத் தவிர வேறு நிறத்திலான ஆடையை அணிவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று அவர் தெரிவிக்கிறார்.
கார்ரோல் பூங்காக்களின் பச்சை நிற பெண் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் இவர், பச்சை நிற உடையை அணிவதற்கு முன் 1930ஆம் ஆண்டுகளில் வெளிவந்த வடிவமைப்பிலான ஆடைகளை அணிந்து வந்தார். அதனைத் தொடர்ந்து, சில்வர், இளஞ்சிவப்பு, நீலம் என வெவ்வேறு நிற ஆடைகளை அணிந்து வந்தார். இந்த வரிசையில் பச்சை நிற உடையையும் அணிந்துள்ளார். பிற ஆடைகளைப் போல் அல்லாமல், பச்சை நிற ஆடை அவருக்கு ஒருவிதமான ஆனந்ததைக் கொண்டு வந்தது. மேலும், இந்த ஆடை மீதான அவரது ஈர்ப்பு குறைய வில்லை. இப்படித்தான் பச்சை நிறம் அவரது வாழ்க்கையை மெல்ல மெல்ல சூழ ஆரம்பித்த்து. அதன் மீது ஏற்பட்ட தீராத காதலினால் நகத்துக்கு பச்சை நிற சாயம், சிகைக்கு பச்சை நிற சாயம், வீடு முழுவதும் பசுமை என அனைத்தையுமே பசுமையாக்கினார்.
வீட்டுக்கு எந்த பொருள்கள் வாங்கினாலும் அது பச்சை நிறத்துடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, பச்சை நிறத்தின் மீது வெறி ஒன்றும் எனக்கு கிடையாது. எனது இந்த பழக்கம் இயற்கையாகத்தான் ஏற்பட்டது. நான் நோவா ஸ்கோடியா நகரில்தான் வளர்ந்தேன். அங்கு எங்கெங்கும் பசுமை. அங்கிருந்து நியூயார்க் நகருக்கு வந்த பின், என்னைச் சுற்றிலும் பசுமை இல்லை என்பதை உணர்ந்தேன். இந்த வெறுமையின் தாக்கம் கூட, பச்சை நிறத்தின் மீதான எனது நேசத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன் என்று அவர் தெரிவிக்கிறார்.
பச்சை நிற ஆடைகள், அன்றாடும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிப்பதில், மன ரீதியில் உதவியாக இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
காலையில் எழும்போது ஒருவிதமான ஏமாற்றம் நிலவும். குளித்து விட்டு பசுமையான ஆடைகளை அணிந்தவுடன் மனதுக்கு புதிய தெம்பு கிடைக்கும். அதை நான் அன்றாடும் உணர்ந்து வருகிறேன் என்கிறார்.
என்னுடைய மகிழ்ச்சியைத் தொடர்ந்து, என்னைச் சுற்றி உள்ளோரின் மகிழ்ச்சியும் இதில் அடங்கும். அதுவும் ஒரு காரணம். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.