பெரு நகரங்களில் தங்கி படித்து வரும் ஏழை மாணவர்கள், குறைவான கட்டணத்தில் வசதியாக தங்குவதற்கு ஏற்ப டென்மார்க்கில் உள்ள கட்டுமான நிறுவனமான அர்பன் ரிக்கெர் புதிய வடிவமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் துறைமுகங்களில் உள்ள கண்டெய்னர்களை மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்றியுள்ளது. இதன்மூலம் குறைவான மாதக் கட்டணத்துக்கு மாணவர்கள் இதில் தங்க முடியும். குறிப்பாக, டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹெகனில் தங்கும் வீடுகளின் வாடகை மிகவும் அதிகம். ஆதலால், மாணவர்களுக்கு இத்தகைய வீடு மிகவும் வசதியாக உள்ளது. இத்தகைய வீடுகளில் தங்க வேண்டுமெனில் மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வாடகையாக அளிக்க வேண்டும். இது, மற்ற வீடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.
அர்பன் ரிகரின் நிறுவனர் கிம் லௌட்ரபின், தனது மகன் தங்குவதற்காக வீடு தேடும்போது, விலை அதிகமாக இருப்பதை அறிந்துள்ளார். தொடர்ந்து, கண்டெய்னர்களில் மாணவர்கள் தங்கும் விடுதியை அமைக்கும் எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது. 3 கண்டெய்னரில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி ஒன்றில் சுமார் 12 மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்க முடியும்.
இத்திட்டத்தை செயல்படுத்தும்முன், இந்நிறுவனம் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழங்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவ்வாறெனில், நகரின் மையப்பகுதியில் விடுதி அமைத்தால்தான் மாணவர்களின் போக்குவரத்து எளிமையாக இருக்கும். அதேவேளை, வாடகையும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம். அதேசமயம், பெரும்பாலான நகரங்களில் துறைமுகங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்தே, கண்டெய்னர்களில் தங்கும் வீட்டினை அமைக்க இந்நிறுவனம் முடிவெடுத்தது.
முதலாவது பிரிவிலான கண்டெய்னர் வீடுகள், மாதிரி அடிப்படையில் இந்நிறுவனம் கோபன்கெஹனில் திறந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 240 கண்டெய்னர் வீடுகளை உருவாக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.அத்துடன், ஸ்வீடனில் 288 கண்டெய்னர் வீடுகளை அமைக்கும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம், பல நாடுகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அர்பன் ரிக்கெர் நிறுவனத்துக்கு அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான கண்டெய்னர் வீடுகளைக் கட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.