இங்கிலாந்தின் கம்பரியே வட்டத்தில், பறவை ஒன்று 270 அதிகமான ஆடுகளை மேய்த்து வருகிறது. மனிதரைப் போல நடந்து சென்றே அனைத்து ஆடுகளையும் தனது கட்டுப்பாட்டில் இப்பறவை வைப்பதாக விவசாயி க்றிஸ் பர்தாம் தெரிவித்தார். தன்னை ஆடு மேய்க்கும் நாயாக இப்பறவை எண்ணிக்கொள்கிறது என்று பர்தாம் குறிப்பிடுகிறார்.
கடந்த 18 மாதங்களாக, இப்பறவையும் அவரின் நாயும், ஆடுகளை மேய்த்தும், ஒழுங்கு படுத்தியும் வருகின்றன. தான் ஆடுகளை ஓட்டிச் செல்லும்போது, எங்கிருந்தோ இப்பறவை வருவதாகவும் ஒரு நாளில் பல முறை தன்னை தேடி வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார். அவரது காலடி சத்தமோ அல்லது குரலோ கேட்டால் போதுமாம் இப்பறவை உடனே பறந்து வந்து விடுமாம்.
33 வயதான பர்தாம் மேலும் கூறுகையில், காலையில் எனது பணியைத் தொடங்கும்போதும சரி, இரவு பணியை முடிக்கும்போதும் சரி, இப்பறவை ஆடுகள் அடைக்கும் பட்டிக்கு வந்து செல்கிறது.சில நேரங்களில் இரவு நேரங்களிலும் இதனைக் காண முடியும்.
இது ஒரு சேவல் ரக பறவையைப் போன்றது. ஆடுகள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று காலையில் பார்க்கச் செல்லும்போது இப்பறவையும் வந்து விடும். சரிபார்த்தபின், காலை உணவுக்காக நாங்கள் இருவரும் எங்களது பாதையைப் பார்த்து சென்று விடுவோம். முதன்முதலாக, இப்பறவை ஆடுகளை மேய்ப்பதைக் காணும்போது எனது கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. ஆனால் அதுவே தற்போது பழகிவிட்டது. எனது ஆடுகளைக் கண்டு இப்பறவை பயப்படுவதில்லை. பறவையும் ஆடுகளும் இப்போது நன்கு பழகி விட்டன என்று நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.