ஊழல் தடுப்புப் பணி பற்றிய 6ஆவது நீல அறிக்கை 4ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. சீரான ஒழுங்கு அமைப்புமுறையை கண்டிப்பான முறையிலும் பன்முகங்களிலும் உருவாக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 2016ஆம் ஆண்டில் பாடுபட்டு, ஊழல் தடுப்புப் பணியைத் தொடர்ந்து ஆழமாக்கி, சட்ட மற்றும் விதிகளின்படி இப்பணியை மேலும் சிறப்பாக மேற்கொண்டு வந்தது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது.
சீன சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆய்வகம் மற்றும் சீன ஊழல் தடுப்பு ஆய்வுகம், சமூக அறிவியல் படைப்புகளின் வெளியீட்டகம் ஆகியவை இவ்வறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன. சீனாவின் கிழக்கு, நடு, மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள 8 மாநிலங்களில் ஊழல் தடுப்புப் பணியின் பயன் பற்றி சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சீன ஊழல் தடுப்பு ஆய்வகம் வினாத் தாள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட அதிகாரிகளும், 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பொது மக்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வரும் ஊழல் தடுப்புப் பணியின் மீது நம்பிக்கை அல்லது ஓரளவு நம்பிக்கை தெரிவித்தனர். இவை, 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட முறையே 9.9 விழுக்காடு, 10.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் சீனாவில் ஊழல் தடுப்புப் பணி சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு துறையில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பொது அதிகாரம் மீதான கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிதி மற்றும் சொத்துக்களின் மேலாண்மை தொடர்ந்து ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிகாரிகளின் ஒழுக்க நெறி மற்றும் நல்லெண்ணம் மேலும் ஆழமாக நிர்வகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊழல் குற்றங்கள் கண்டிப்பான முறையில் கண்காணிக்கப்பட்டு ஊழல் புரந்தோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, நாடு முழுவதிலும் 67 மாநில நிலை தலைவர்களுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. சட்டம், சுற்றுசூழல் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, அரசு சார் தொழில் நிறுவனங்கள் முதலிய துறைகளிலும் ஊழல் புரிந்தவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வறுமை ஒழிப்புத் துறையில் கடந்த ஆண்டின் முதல் 6 திங்களில் மொத்தம் 5292 ஊழல் புரிந்த சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஊழல் தடுப்புப் பணி அனைவருடனும் அனைத்து வாரியங்களுடனும் தொடர்புடையதாகவும், ஊழல் தடுப்புத் துறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் மனவுறுதியையும் இது காட்டுகின்றது.
மேலும் ஊழல் தடுப்புத் துறையில் சீனா பல நாடுகளுடன் சிறப்பாக ஒத்துழைத்து வருகின்றது. தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டு நவம்பர் வரை, ஊழல் தொடர்பாக 70க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குத் தப்பித்து சென்ற 2442 பேர் கைது செய்யப்பட்டு சீனாவுக்குத் திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளனர். மொத்தம் 854 கோடி யுவான் முறைகேடான பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
"சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிக்குள் கண்காணிப்பு விதிகள் போன்ற ஆவணங்கள் வெளியிடுவது உள்ளிட்ட ஊழல் தடுப்புத் துறையில் 10 முக்கிய விஷயங்கள் இந்த நீல அறிக்கையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.