• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் ஊழல் தடுப்புப் பணி தொடரும்
  2017-01-09 16:55:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு பரிசோதனைக்கான 18ஆவது மத்திய ஆணையத்தின் 7ஆவது முழு அமர்வு 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் ஒரு சுற்றறிக்கை மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு பரிசோதனை வாரியங்களின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பணிக்கான விதிமுறை ஆகியன வெளியிடப்பட்டன. ஊழல் தடுப்புப் பணியை தொடர்ந்து வலுவான முறையில் மேற்கொள்வது, கட்சி ஒழுங்கு கண்காணிப்புப் பணியை வலுப்படுத்துவது, நாட்டின் கண்காணிப்பு மற்றும் ஒழங்கு பரிசோதனை அமைப்புமுறையில் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது உள்ளிட்ட 7 துறைகளில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் இக்கூட்டத்தில் விபரமாக வகுக்கப்பட்டன.

ஊழல் குற்றம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பான முறையில் தண்டனை விதிக்கின்றோம். இத்தகைய குற்றம் சகித்துக்கொள்ளவே முடியாது. ஊழலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள இந்த நேர்மையான போரில் நம் மனவுறுதியுடன் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் இந்த அமர்வில் வலியுறுத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு 2017ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. கட்சி ஒழுங்கு பரிசோதனைக்கான 18ஆவது மத்திய ஆணையத்தின் 7ஆவது முழு அமர்வு முந்தைய பணிகளைத் தொகுத்து அடுத்த கட்டப் பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று பீக்கிங் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஊழல் தடுப்பு ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் சுவாங் தே சுயே இது பற்றி கருத்து தெரிவித்தார்.

கண்காணிப்பு மற்றும் பரிசோதனை அமைப்புமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான நெறிவரைபடம் இக்கூட்டத்தில் வகுக்கப்பட்டது. தேசிய கண்காணிப்பு மற்றும் பரிசோனை ஆணையத்தை கட்டியமைப்பது, மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டம் ஆகிய 3 நிலை கண்காணிப்பு மற்றும் பரிசோதனை ஆணையங்களைக் கட்டியமைப்பது ஆகியவை இத்திட்டத்தில் இடம்பெறும்.

ஊழல் தடுப்புப் பணியில் தற்போதைய ஆற்றலை இந்த சீர்திருத்த நடவடிக்கை திரட்டும். அரசு அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து பணியாளர்களின் மீது கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் என்று சீன அரசியல் மற்றும் சட்டவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மா குவாய் தே கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040