• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் சேவல் ஆண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள்
  2017-01-27 16:44:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன சந்திர நாட்காட்டியின் படி சேவல் ஆண்டு வர உள்ளது. ஓராண்டில் சுறுசுறுப்புடன் பணிபுரிந்த சீன மக்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து ஓய்வெடுத்துள்ளனர். மிக விமரிசையாக வசந்த விழாவைக் கொண்டாடும் வகையில், குடும்பத்தினருடன் ஒன்றுகூடி மகிழ்வது, கோயில் திருவிழாவைப் பார்வையிடுவது, சுற்றுப்பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முறைகளை அவர்கள் தெரிவு செய்கின்றனர். விழாக் கோலம் பூண்ட சீனாவில் அனைவரும் புத்தாண்டின் மகிழ்ச்சியை உணர்ந்து கொள்ளலாம். சீன மக்கள் கோலாகலமான முறையில் பாரம்பரியத்தைப் பேணிமதித்து, பண்பாட்டு வளங்களைப் பரவல் செய்து மகிழ்கின்றனர்.

வெளியூரில் வேலை செய்யும் மக்கள் வசந்த விழாவுக்கு முன் தொடர்வண்டி, பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.

ஒன்றுகூடி உணவு சாப்பிடுவதைத் தவிர, வாழ்த்துச் சொற்கள் எழுதப்பட்ட சிவப்பு தாள்களை ஒட்டுவது, பட்டாசு வெடிப்பது, கோயில் திருவிழா போன்று, வசந்த விழா தொடர்பான நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் சீனர்களிடையில் பரவி வருகின்றன.

தனி நபர் மற்றும் குடும்பங்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது இயல்பு. விடுமுறை வாழ்க்கையை செழிப்பாக்கும் வகையில், சீனாவின் பல்வேறு இடங்கள் கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். எடுத்துக்காட்டாக, பெய்ஜிங்கின் டி தான், லோங் தான் ஹு உள்ளிட்ட பூங்காக்களில் கோயில் திருவிழா நடத்தப்பட உள்ளன. ஷாங்காய் விலங்கியல் பூங்காவில் கோயில் குடும்பப் பறவை காட்சி நடத்தப்பட்டுள்ளது. வெள்ளை மயில் உள்ளிட்ட அரிதான பறவை வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஜியாங் சீ மாநிலத்தின் வூ யுவான் மாவட்டத்தில், தனிச்சிறப்புமிக்க நுவோ நடனம், சிறப்பான ஆடைகள், தத்ரூபமான முகமூடி, வலிமைமிக்க அசைவுகள் ஆகியவை மூலம் ரசிகர்களிடையில் கவனத்தையும் ஆரவாரத்தையும் பெற்றுள்ளன.

ஜியாங் சூ மாநிலத்தின் நான்ஜிங் நகரில், கன்ஃபியூஷியஸ் கோயில், சின்ஹுவான் ஆறு, மிங் வம்ச நகரச் சுவர் உள்ளிட்ட இடங்களில் விளக்கு காட்சி நடத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய சுவைமிக்க நாட்டுப்புற கொண்டாட்டங்களைத் தவிர, குடும்பச் சுற்றுலா, சீன மக்கள் விழாவைக் கொண்டாடும் புதிய வளர்ச்சிப் போக்காக மாறி வருகிறது. நாட்டுப்புறச் சுற்றுலா, கிராமப்புறச் சுற்றுலா, பனி வயல் சுற்றுலா, கடற்பரப்பில் சுற்றுலா உள்ளிட்ட வடிவங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

வசந்த விழாவைக் கொண்டாடும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த போதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசந்த விழா பற்றிய சீன மக்களின் மாறாத கருத்து, நல்லிணக்கம் மற்றும் ஒன்றுகூடி மகிழ்வது ஆகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040