குளிரிலிருந்து தப்பிக்கும் பொருட்டுத் தெற்குப் பகுதிக்குச் செல்வது, வடக்குப்பகுதிக்குச் சென்று பனிக்காட்சியைப் பார்த்து ரசிப்பது ஆகியவை இவ்வாண்டு வசந்த விழாவின் தனிச்சிறப்பு. இதுக்குறித்து, சீனத்தேசிய சுற்றுலா பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் சியுயெ யாபிங் பேசுகையில், அழகான கிராமம், சுற்றுலா சிற்றூர், தலைச்சிறந்த காட்சியிடம், சிறப்புப்பூங்கா முதலியவை பயணிகளின் முதலாவது தேர்வாக மாறியுள்ளன. வெப்ப ஊற்று, பனி, கடல் தீவுகள், சுற்றுலாக் கப்பல் உள்ளிட்ட புதிய தேர்வுகள் வரவேற்கப்பட்டன என்று குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினால், பனிப்பயணம் இவ்வாண்டு மிகவும் பிரபலமாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. அவர் மேலும் கூறியதாவது:
வசந்தவிழா விடுமுறை, பனிப்பயணத்திற்கான நல்ல காலமாகும். ஹெய்லுங்ஜியாங், ஜீலின், லியோநிங், உள்மங்கோலியா, சின்ஜியாங் முதலிய இடங்கள் தங்களது எழில் மிக்க பனிப்பயண மூலவளத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றன. பனிப்பயணம், சிறப்பான பனி அனுபவம், குளிர்கால கார் ஓட்டும் சுற்றுலா நெறி ஆகிய சுற்றுலா சேவைகளைத் தொகுத்து வழங்கின. இதில், பனிச்சறுக்கல், பனிச்சிற்பங்கள் ஆகியவை இளம் பயணிகளிடையே வரவேற்கப்பட்டுள்ளன என்றும் சியுயெ யாபிங் தெரிவித்தார்.
புள்ளிவிபரங்களின் படி, 2017ஆம் ஆண்டு வசந்த விழாக்காலத்தில், வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்ட சீனர்களின் எண்ணிக்கை, முதல்முறையாக 60 இலட்சத்தைத் தாண்டும். சீனாவின் வசந்தவிழா, உலக சுற்றுலாவின் பொற்காலமாக மாறும்.
ஒரு சுற்றுலா இணையதளத்தின் பொறுப்பாளர் வாங் யூவோ அறிமுகப்படுத்தி கூறியதாவது:
இவ்வாண்டின் வெளிநாட்டுப்பயண நெறிகளில் எதிர்பாராத சில இடங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தென்னமெரிக்காவின் சில நாடுகள், துருக்கி, எகிப்து முதலியவை இதில் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
வசந்த விழாக்காலத்தில் சுற்றுலாச் சந்தையின் சுறுச்சுறுப்பான நிலைமையினால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணச் செலவு அதிகமாகிவிட்டது என்று சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் செய்தியாளரிடம் கூறினார்.