• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரேன் பிரச்சினையில் ரஷியாவின் வலுவான நிலைப்பாடு
  2017-02-21 15:00:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் அண்மையில் அரசு உத்தரவு ஒன்றில் கையொப்பமிட்டார். அதன் படி, உக்ரேனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துனேஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உக்ரேன் குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாத மக்களின் அடையாள அட்டைகளை ஏற்றுக்கொண்டு விசாவின்றி ரஷியாவுக்குச் செல்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படும். உக்ரேன் அதிகார வட்டாரத்துக்கு நிர்பந்தம் அளிக்கும் அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ரஷியா தனது வலுவான நிலைப்பாட்டைக் காட்டுவது இதன் நோக்கமாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மின்ஸ்க் ஒப்பந்தத்தின்படி கிழக்கு உக்ரேன் பிரச்சினையைப் பல்வேறு தரப்புகளும் தீர்க்கும் வரை இந்தக் கட்டளை செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதன்மூலம் துனேஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உக்ரேனியர்களுக்கான ஆதரவை ரஷியா அதிகரித்துள்ளது.

 2014ஆம் ஆண்டு, உக்ரேனின் கிழக்கு பகுதியில் ராணுவ மோதல் நிகழ்ந்த பிறகு, இப்பகுதியில் வசித்து வரும் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ நிலையங்களும் சீர்குலைக்கப்பட்டுள்ளன. மேலும் ரஷிய-உக்ரேன் எல்லை பகுதியிலுள்ள பல குடும்பங்களில் இரு நாடுகளைச் சேர்ந்தோரும் உள்ளனர். புதினின் இக்கட்டளை அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.

அண்மை காலத்தில் கிழக்கு உக்ரேன் பகுதியில் ராணுவ நிலைமை மீண்டும் தீவிரமாகி வருகிறது. இப்பிரச்சினையைத் தீர்க்க உக்ரேன் அரசு புதிய அமெரிக்க அரசுடன் ஆக்கப்பூர்வமாக தொடர்பு கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த செயல்பாடு உக்ரேனுக்கு ஒரு பதிலடியாகக் கருதப்படலாம். கிழக்கு உக்ரேனில் அரசு சாரா ஆயுதப் பிரிவு கட்டுப்படுத்தியுள்ள பகுதியில் வாழும் குடிமக்களின் அடையாளத்தை ரஷியா ஏற்றுக்கொள்வது, உக்ரேனின் உரிமை பிரதேசத்தில் ரஷியா ஊடுருவி, பன்னாட்டுச் சட்டத்தை மீறுவதற்கான மற்றொரு சான்றாகும் என்று உக்ரேன் அரசுத் தலைவர் பொலொச்சேன்கொ 18ஆம் நாள் அறிக்கை ஒன்றில் கூறினார்.

துனேஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவைச் சேர்ந்த மக்கள் ரஷியாவின் இச்செயலுக்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர். லுஹான்ஸ்க் தலைவர் புலொட்னிஸ்க்கி கூறியதாவது, சர்வதேசம் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசை ஏற்றுக்கொள்ளவதை புதினின் இச்செயல் விரைவுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

ஆனால், புத்தினின் கட்டளை துனேஸ்க் மற்றும் லுஹான்ஸ்கின் சுதந்திரம் என்ற அடிப்படையில் இல்லை என்றும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் ரஷியாவின் செய்தி ஊடகங்கள் கூறின. சர்வதேச பிரச்சினையில் பேரம் பேசுவதற்கு ரஷியா மேற்கொள்ளும் ஒரு செயல்பாடு இதுவாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040