சீன அரசியல் துறையில் மிகவும் முக்கிய நிகழ்வாக, தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடர்கள் துவங்கவுள்ளன. அடுத்த சில நாட்களில், சீனாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினர்களும் பெய்ஜிங்கில் தேசிய வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் அதிகம கவனம் செலுத்தும் பிரச்சினை என்ன? தனியார் மற்றும் சமூக வளர்ச்சிக்கு நன்மை ஏற்படுத்துவதில் மக்கள் கேட்க விரும்பும் நல்ல கொள்கைகள் என்ன? இந்த கேள்விகளுடன் எமது செய்தியாளர்கள் பெய்ஜிங்கில் சிலரைப் நேர்காணல் செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், புகைப்பனி என்ற சொல், மக்களிடையே கவலை ஏற்படுத்தியது. இந்நிலையில், காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாட்டில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் இவ்வாண்டு இரண்டு கூட்டத் தொடர்களில் வகுக்கப்படும் புதிய பணிகள், மக்களின் கவனத்தை ஈர்த்தவை ஆகும். பேட்டி அளித்த ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு தூய்மையான காற்று வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
சீன நகரமயமாக்கம் மற்றும் பொருளாதாரச் சமூகத்தின் விரைவான வளர்ச்சியுடன், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக நகரங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். சீன நகரப்புற வளர்ச்சிக்கு ஆக்கமுள்ள பங்களிப்பை ஆற்றும் அதேசமயத்தில், அவர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, முழுமையற்ற சமூக காப்புறுதி முறை, அவர்களின் குழந்தைகள் கல்வி பெறும் சிக்கல் போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. நகரவாசிகளை போல, ஓய்வூதிய காப்பீடு, மருத்துவ காப்பீடு, வேலையின்மை காப்பீடு, பிறப்பு காப்பீடு, வீட்டு வசதி வழங்கும் நிதி வசூல் முதலான காப்புறுதி முறையை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பு கொள்கின்றனர்.
தவிரவும், மருத்துவ முறைச் சீர்திருத்தம், நடு நிலை கல்வி, வறுமை நிவாரணம் மற்றும் வறுமை ஒழிப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகிய விஷயங்களிலும் மக்கள் பலர் கவனம் செலுத்தியுள்ளனர். தற்போது, இரண்டுக் கூட்டத் தொடர்கள் மீது சீன மக்களின் கவனம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு, சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் நடைமுறைக்கு வரும் முக்கிய தருணமாகும். இத்துடன், தனியார் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு மேலதிக நல்ல செய்திகள் இரண்டுக் கூட்டத் தொடர்களில் இருந்து கொண்டு வரும் என்பதை சீன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.