சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடருக்கான செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, சூடான பிரச்சினைகள், சீனாவின் தூதாண்மை சிந்தனை ஆகியவை குறித்து 8ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
வரும் மே திங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான கருத்தரங்கு சீனாவில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பெற உள்ள முன்னேற்றங்கள் மீதான சீனாவின் எதிர்பார்ப்பை வாங் யீ விளக்கிக் கூறினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் சீனாவினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அதன் மூலம் கிடைக்கும் பயன்களால் பல்வேறு நாடுகளும் பயனடைந்து வருகின்றன. கூட்டு செழுமைக்கான பொதுத் திசையைத் தெளிவுபடுத்துவது, முக்கிய ஒத்துழைப்பு திட்டப்பணிகளை உறுதிப்படுத்துவது, இடை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு நடவடிக்கையை முன்வைப்பது ஆகிய மூன்று துறைகளில் இக்கருத்தரங்கு சாதனை பெற வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
சீன-அமெரிக்க உறவு குறித்து பேசுகையில், இருநாட்டுறவு ஆக்கப்பூர்வமான திசையை நோக்கி வளர்ந்து வருகிறது. பல்வேறு நிலை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை நனவாக்க இருதரப்பும் பயனுள்ள தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று நல்ல ஒத்துழைப்பு கூட்டாளியாக இருக்க முடியும் என்று வாங் யீ தெரிவித்தார்.
கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து வாங் யீ சீனாவின் ஆலோசனையை விவரித்தார். முதலில் வட கொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அத்துடன், அமெரிக்காவும் தென் கொரியாவும் பெருமளவு இராணுவப் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அதற்குப் பிறகு, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை அமைதி முறைமையின் உருவாக்கத்துடன் இணைத்து, ஒரேநேரத்திலும் சமநிலையிலும் பல்வேறு தரப்புகளின் கவலையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தவிரவும், சீனாவின் தனிச்சிறப்புடைய தூதாண்மை சிந்தனை மற்றும் திசையமைவு பற்றி வாங் யீ தொகுத்து கூறினார். நாடுகளை, தலைமை நாடுகள் மற்றும் தலைமையின் கீழுள்ள நாடுகள் என பிரிக்க வேண்டாம் என்று அவர் கூறினார். அதிகமான மூல வளங்கள் மற்றும் திறமைகள் பல கொண்ட வல்லரசு, அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பெரும் பங்காற்ற வேண்டும். ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமையை நிறைவேற்ற விரும்புகிறது. உலகில் 2ஆவது பெரிய பொருளாதார சமூகமான சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்ற விரும்புகிறது. மிகப் பெரிய வளரும் நாடான சீனா, வளரும் நாடுகளின் நியாய உரிமை நலன்களைப் பேணிக்காப்பதில் மேலும் பங்காற்ற விரும்புகிறது என்று வாங் யீ தெரிவித்தார்.
மேலும், பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு முறைக்கு இவ்வாண்டு சீன ஆண்டாகும். தலைவர் பதவி வகிக்கும் சீனா, இவ்வமைப்பு முறையின் மூலம் இதர வளரும் நாடுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையை, உலகளவில் செல்வாக்கு மிக்க ஒத்துழைப்பு மேடையாக உருவாக்கும் என்றும் வாங் யீ கூறினார்.