இவ்வாண்டு வெளிநாட்டு வர்த்தகம் எதிர்நோக்கும் ஒட்டுமொத்த சூழலில் உறுதியற்ற காரணிகள் அதிகம். இன்னல்களும் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட முடியாதவை. ஆனால் தொலைநோக்கு பார்வையுடன் மதிப்பிட்டால், வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ காரணிகள், சாதகமான நிலைகள், தொழில்துறையின் போட்டியாற்றல் முதலியவை அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில் வெளிநாட்டு வர்த்தகத்தின் மறுமலர்ச்சி தொடர்பாக முன்வைக்கப்பட்ட இலக்கை நனவாக்குவதன் மீது நம்பிக்கை கொள்வதாக சுன் ஜிவென் தெரிவித்தார்.
அண்மையில், சீனாவின் ச்சொங் சிங் செய்தித்தொடர்பு நிறுவனம், அமெரிக்காவின் நிதி அமைச்சகம், வணிக அமைச்சகம், சட்ட நீதி அமைச்சகம் ஆகியவற்றுடன் இணக்க உடன்படிக்கையை உருவாக்கி, அமெரிக்கா விதித்த 89 கோடி அமெரிக்க டாலர் அபராதத்தை ஏற்றுக் கொண்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் இவ்வுடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் ச்சொங் சிங் நிறுவனத்தை நீக்குவதாக அந்நாட்டின் தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் முன்மொழிந்தது. இது குறித்து சுன் ஜிவென் பேசுகையில், அமெரிக்க தரப்பு உள்நாட்டின் சட்டத்தைப் பயன்படுத்தி சீன தொழில் நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று கூறினார். சீன தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தையில் சட்டப்படி பணிபுரிய வேண்டும் என்று சீனா எப்போதும் கோருகிறது. அமெரிக்க தரப்பு இருநாட்டு வர்த்தக உறவின் ஒட்டுமொத்த நிலையைக் கருத்தில் கொண்டு உரிய முறையில் இச்சம்பவத்தைக் கையாள வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
சீனா தயாரித்த தொலைக்காட்சி நாடகங்கள், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சீன இலக்கிய படைப்புகள் ஆகியவை வெளிநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு பண்பாட்டு வர்த்தகத் தரவுகளை சீன வணிக அமைச்சகம் கூட்டத்தில் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் சீனப் பண்பாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகையில் 6880 கோடி அமெரிக்க டாலர் மிகைத்தொகை ஆகும்.
அடுத்த கட்டத்தில், சீன வணிக அமைச்சகம் தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, மேடைகளை விரிவாக்கி, பண்பாட்டுக்கான வெளிநாட்டு வர்த்தகத்தை வளர்க்கும். சீனாவின் தனிச்சிறப்பு, எழுச்சி மற்றும் ஞானம் உள்ளிடக்கிய தலைசிறந்த பண்பாட்டு வளங்கள் உலகளவில் அதிகமாக பரப்பப்படும் என்று சுன் ஜிவென் தெரிவித்தார்.(வான்மதி)