2016ஆம் ஆண்டு நாடளவில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 63 ஆயிரம் பேர் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இவர்களில் மாநில நிலைக்கு மேலான பதவியில் இருந்த 35 பேரும், பணியகம் மற்றும் நகர் நிலை பதவியில் இருந்த 240 பேரும் அடங்குவர் என்று உச்ச மக்கள் நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் அதேவேளை, உள்நாட்டில் மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற அதிகாரிகளை இலக்காகக் கொண்ட நடவடிக்கையையும் உச்ச மக்கள் நீதிமன்றமும் உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றமும் மேற்கொண்டுள்ளன. இதுவரை 164 பேர் சீனாவுக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சீனாவின் ஊழல் ஒழிப்புப் பணி பெரும் சாதனை பெற்றுள்ளதில் ஐயமில்லை. இவ்வாண்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் அளவைக் குறைக்க மாட்டோம் என்று இவ்விரு மன்றங்களின் பணியறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பின் அளவைக் குறைக்காமல், சீர்கேட்டைச் சகித்துக் கொள்ளாத மனநிலை மாற மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம் என்றும், பதவியைப் பயன்படுத்தும் குற்றத்தைத் தடுத்து தண்டிக்கும் பணியை உறுதியாக செவ்வனே செய்ய வேண்டும் என்றும் உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், சீனாவின் சட்ட மற்றும் நீதித் துறையின் சீர்திருத்தத்தில் போலியான மற்றும் தவறான வழக்குகளைத் திருத்துவது முக்கிய கடமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையில் தவறு செய்தால், நீதியை அவமதிக்கும். இதிலிருந்து கடுமையான படிப்பினையைப் பெற வேண்டியிருக்கும் என்று உச்ச மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு சட்ட மற்றும் நீதித் துறையின் சீர்திருத்தத்தை சீனா பன்முகங்களிலும் ஆழமாக்கும் முக்கிய ஆண்டாகும். பொது மக்களை ஒவ்வொரு வழக்கிலும் நேர்மை மற்றும் நியாயத்தை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். வழக்குகளை விசாரணை செய்பவர்கள் அதற்காக பொறுப்பேற்க வேண்டும். விசாரணை மற்றும் தீர்ப்பை மையமாகக் கொண்ட குற்றவியல் வழக்குதாக்கல் முறையின் சீர்திருத்தம் உள்ளிட்ட பல சீர்திருத்த பணிகளைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும். இதனால் சட்ட மற்றும் நீதித் துறையின் தரம், செயல்திறன் மற்றும் பொது நம்பகத் தன்மையை உயர்த்த முடியும் என்று உச்ச மக்கள் நீதிமன்றம் மற்றும் உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(வான்மதி)