இவ்வறிக்கையைச் சமர்ப்பிக்கப்பட்ட பின், ஐ﹒நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லியூ சை யீ கூறுகையில், பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏற்றிச்செல்லும் கருவிகளின் பரவலைத் தடுப்பது, சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலை தன்மையுடன் தொடர்புடையது. இது சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் கூட்டு அறைகூவல் மற்றும் முக்கியக் கடமையாகும். உலக நிர்வாகத்தின் முக்கிய பகுதியுமாகும் என்றார்.
சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சியில், அணு ஆயுதப் பரவல் தடுப்பின் நடைமுறையாக்கம் மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், நிலைமை இன்னும் பதற்றமாகவும் சிக்கலாகவும் உள்ளது. இந்நிலைமையை எதிர்கொண்டு, பல்வேறு நாடுகள் சரியான பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். பயனுள்ள பாதுகாப்புச் சூழலை உருவாக்க வேண்டும். பனிப் போர் சிந்தனையைக் கைவிட்டுச் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று லியூ சை யீ வலியுறுத்தினார்.
மேலும், கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மைமயமாக்கம், ஈரான் ஆணு ஆற்றல் பிரச்சினை முதலிய சூடான பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறை மூலம், அணு ஆயுதப் பரவல் தடுப்புப் பிரதேசத்தின் சூடான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென அவர் வலியுறுத்திக் கூறினார்.
சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு முறைமையை மேம்படுத்தி உலகளவில் இப்பணியை வலுப்படுத்தி உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்க, சர்வதேச சமூகத்துடன் இணைந்து சீனா தொடர்ந்து பங்காற்றும் என்றும் லியூ சை யீ தெரிவித்தார். (நிலானி)