சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையத்தால் முக்கியமாக ஏற்பாடு செய்யப்பட்ட சீன வளர்ச்சியின் உயர்நிலை கருத்தரங்கின் 2017ஆம் ஆண்டுக் கூட்டம், அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. விநியோக முறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, இந்தக் கருத்தரங்கின் குவிமையமாகும். 19ஆம் நாள் அதன் துவக்க விழாவின் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணை தலைமையமைச்சருமான சாங்காவ்லீ உரை நிகழ்த்துகையில், இவ்வாண்டு இரும்புருக்கு உற்பத்தித் திறனை மேலும் 5 கோடி டன் குறைக்க வேண்டும். நிலக்கரி உற்பத்தித் திறனை 15 கோடி டனுக்கு மேல் குறைக்க வேண்டும் என்று கூறினார். அதோடு, வரியைக் குறைக்கும் அளவை மேலும் விரிவாக்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் வர்த்தகச் செலவை குறைக்கும் வகையில், வரி சாரா சுமையை மேலும் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ஹேலீஃபேங் இக்கருத்தரங்கில் பேசுகையில், கடந்த ஆண்டின் முயற்சியுடன், விநியோக முறைச் சீர்திருத்தத்தில் சில சாதனைகள் காணப்பட்டுள்ளன என்று கூறினார். அவர் பேசுகையில், பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, பொருளாதார அதிகரிப்பில் நுகர்வின் பங்கு 64.4 விழுக்காட்டை எட்டியுள்ளது. மூன்றாவது தொழிற்துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 51.6 விழுக்காடுள்ளது. பழைய இயக்க ஆற்றலிலிருந்து புதியதற்காக மாறும் வேகம் விரைவாக இருக்கிறது. புதிய உற்பத்திப் பொருட்கள், புதிய தொழில்கள், புதிய மாதிரிகள் இடைவிடாமல் உருவாகி வருகின்றன என்று அவர் கூறினார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் டேக்ஜகோ நாகோ பேசுகையில், சீன பொருளாதாரம், நுகர்வை முக்கியமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி மாதிரிக்காக தொடர்ந்து மாறியுள்ளது. சேவைத் துறையில், மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் விநியோக முறைச் சீர்திருத்தத்துக்கு அவர் உடன்பாடு தெரிவித்தார்.
உலக வங்கியின் முதன்மை செயல் அதிகாரி கிருஷ்டலினா ஜியேரெஜிவா பேசுகையில், விநியோக முறைச் சீர்திருத்தம், பொருளாதார அதிகரிப்பை விரைவுபடுத்துவதற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்று கூறினார்.
விநியோகம் மற்றும் தேவை ஒன்றுக்கு ஒன்று பொருந்துவதை முன்னேற்றி, உள்நாட்டுத் தேவை உள்ளார்ந்த ஆற்றலை மேலும் விடுவிக்க வேண்டும். அதே வேளையில், பொது சேவை, அடிப்படை வசதிகள், புத்தாக்க வளர்ச்சி, மூலவளம், சுற்றுச்சூழல் முதலிய ஆதரவு ஆற்றலையும் உயர்த்த வேண்டும் என்று இக்கருத்தரங்கில் சீனாவின் பல அதிகாரிகள் தெரிவித்தனர்.(ஜெயா)