36 ஆண்டுகளில், ஒருவர் பல்வேறு வேலைகளைச் செய்து பெரும் சாதனைகளைப் பெற முடியும். ஆனால், சீனாவின் குய்சோ மாநிலத்தின் சுன்யி நகரின் துவன் ச்சியே கிராமத்திலுள்ள ஹுவாங் தா ஃபா என்பவர், ஒரே ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்தி அதற்கென பங்காற்றியுள்ளார். அவரது தலைமையில் செங்குத்தான பாறையில் 10 ஆயிரம் மீட்டர் நீளமுடைய நீர் இறைப்பு கால்வாய் கட்டியமைக்கப்பட்டது.
வசந்தகாலம், பயிரிடும் காலமாகும். குய்சோ மாநிலத்தின் சுன்யி நகரின் துவன் ச்சியே கிராமத்தில் விவசாயிகள் ஒன்று கூடி, வேலை செய்து ஷூ கோ தேய், நீர் தேக்கத்திலிருந்து நீர் எடுத்து, நெல் நாற்றுக்கு பாசனம் செய்து வருகின்றனர்.
ஆனால் முன்பு இத்தகைய வசதி இல்லை. அவர்களால், சோளம் மட்டும் பயிரிட முடியும். இதனால் விவசாயிகள், தினமும் சோளம் மட்டுமே சாப்பிடலாம். வசந்தவிழா அதாவது சீனாவின் மிக முக்கிய விழா காலத்தில் மட்டும், முதியோருக்குக் குறைந்த அளவில் அரிசி வாங்கினர். நீர்ப் பற்றாகுறையே, இதற்கான முக்கியக் காரணமாகும் என்று ஷூ கோ தேய் கூறினார்.
இத்தகைய சிக்கலான நிலைமையில், 1959ஆம் ஆண்டிலிருந்து மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆண்டில், ஹுவாங் தா ஃபா என்பவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதே ஆண்டில், அவர் கிராம தலைவராகவும் நியமிக்கப்பட்டார். நீர் இறைப்பு கால்வாய் ஒன்றை கட்டியமைப்பது, இந்த இளைஞரின் முதல் திட்டமாகும்.
ஆனால், அப்போது, ஹுவாங் தா ஃபாவுக்கு, நீர் இறைப்பு கால்வாய் கட்டியமைக்கும் தொழில் நுட்பம் ஒன்றும் தெரியாது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இக்கால்வாய் அழிந்தது. பத்துக்கு மேலான ஆண்டுகள் முயன்றும், இக்கால்வாயை வெற்றிகரமாக கட்டியமைக்க முடியவில்லை.
தொழில் நுட்பம் இல்லாத நிலைமையில், நீர் இறைப்பு கால்வாய் கட்டியமைப்பது கடினமான ஒன்றாக இருந்தது. 53 வயதில், நீர் மின்னாற்றல் நிலையம் ஒன்றில் அவர் வேலை செய்தார். அங்கு பணிபுரிந்த 3 ஆண்டு காலத்தில் அவர் கால்வாய் கட்டியமைக்கும் தொழில் நுட்பங்களைக் கற்று கொண்டார்.
56 வயதான போது, அவர் ஊருக்குத் திரும்பி, மீண்டும் நீர் இறைப்புக் கால்வாயைக் கட்டியமைத்தார்.
3 ஆண்டுகால தொடர்ச்சியான முயற்சிக்குப் பிறகு நீர் இறைப்பு கால்வாய் வெற்றிகரமாக கட்டியமைக்கப்பட்டது.
தற்போது 81 வயதான ஹுவாங் தா ஃபா இந்நீர் இறைப்பு கால்வாயை அடிக்கடி சென்று பார்வையிடுகிறார். இப்போது அவருக்குப் பின்னே இருக்கும் பச்சையான நெல் வயல் தலையை அசைத்தபடி, அவரை வரவேற்கிறது.
(கலைமணி)