நடைபெறவுள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு மன்ற கூட்டம் பற்றிய செய்தியாளர் கூட்டம் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இம்மன்ற கூட்டத்துக்கான ஆயத்தப் பணி, இதில் கலந்துகொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இம்மன்ற கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் வாங் சியாவ் தாவ் ஆகிய இருவரும் அறிமுகம் செய்தனர்.
இம்மன்ற கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, மேலும் திறப்புத்தன்மை வாய்ந்த பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மேடையை உருவாக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. உலகப் பொருளாதாரத்திலும் பல்வேறு நாடுகளின் வளர்ச்சியிலும் இம்மேடை கவனம் செலுத்தி, பல்வேறு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை முன்னேற்றி, பண்பாட்டு பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று வாங் யீ தெரிவித்தார்.
அடுத்த மாதத்திற்குள், இம்மன்ற கூட்டம் துவங்கும். இதற்கான ஆயத்தப் பணி, கடைசி கட்டத்தில் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கருத்தை வெளியிட்ட பிறகு, இத்திட்டப்பணி தொடர்பாக சீனா நடத்தும் மிக பெரியளவிலான சர்வதேச கூட்டம், இதுவாகும்.
இவ்வாண்டு துவக்கத்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில், இக்கூட்டம் நடைபெறுவது பற்றிய ஷீ ச்சின் பிங்கின் அறிவிப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது வரை, 28 நாடுகளின் தலைவர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார்.
சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியில் கூட்டாக பங்கெடுப்பது, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது என்பது இம்மன்ற கூட்டத்தின் தலைப்பாகும். இவற்றில் ஒத்துழைப்பும், கூட்டாக வெற்றி பெறுவதும், முக்கிய அம்சங்களாகும் என்று வாங் யீ தெரிவித்தார்.
துவக்க விழா, தலைவர்களின் வட்ட மேசை மாநாடு, உயர் நிலை கூட்டம் ஆகியவை, இம்மன்ற கூட்டத்தில் அடங்கும். மே 14ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பீங், துவக்க விழாவில் கலந்துகொண்டு, வட்ட மேசை மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)