2013ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி, பயனுள்ள ஒத்துழைப்பு கட்டத்தில் நுழைந்துள்ளது. சீன தொழிற்சாலைகள், உற்பத்தி பொருட்களையும் சேவையையும் விநியோகிக்கும் போது, மேலை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் வேறுப்பட்ட வழிமுறைகளை உருவாக்கியுள்ளன. இவ்வாக்கப்பணியில் கலந்துகொண்ட நாடுகளின் நிலைமை மற்றும் பொது மக்களின் பழக்கத்திற்கிணங்க, தனிச்சிறப்பான உற்பத்திப் பொருட்களையும் சேவையையும் விநியோகிக்கும். இந்த நாடுகளின் தொழில் நிறுவனங்கள், வளர்ச்சி போக்கில் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், மேலதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சீனத் தொழில் நிறுவனங்கள் பங்காற்றும்.
இன்ஸ்பூர் என்ற சீனத் தொழில் நிறுவனம், மேகக் கணிமைச் சேவையை விநியோகிக்கின்ற தொழில் நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம் உலகின் 108 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சேவை புரிந்து வருகின்றது. அதோடு அமெரிக்கா, ஜப்பான், சீனாவின் தைவான், ஹாங்காங் ஆகியவற்றில் ஆய்வு மையங்களையும் உருவாக்கியுள்ளது. இன்ஸ்பூர் நிறுவனம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நாடுகளுக்காக தனியான பிரிவு ஒன்றை உருவாக்கி, தனிச்சிறப்பான சேவையை அளிக்கின்றது. எடுத்துக்காட்டாக, சில நாடுகளில் தொழிலாளர்கள் குறைவாக உள்ளனர். இம்மாதிரி நாடுகளுக்குச் சீன தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்களை அனுப்பி, தனிச்சிறப்பு சேவையை விநியோகிக்கும். ஜிம்பாபுவேயின் வரி வசூலிப்பு தகவல்மயமாக்க திட்டப்பணிக்கு இன்ஸ்பூர் பொறியியலாளர்களை அனுப்பியது. இது குறித்து இன்ஸ்பூர் நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குநர் வாங் ஜூன் ச்சியாங் கூறியதாவது—
அமெரிக்காவின் ஐ பி எம் தொழில் நிறுவனம், நேரத்தின் படி, தங்கள் சேவைக்குரிய கட்டணத்தை வசூலிக்கும். அதவாது, அந்நிறுவனத்தின் பொறியியலாளர்கள், ஒரு குறிப்பிட்ட தொழில் நிறுவனத்திற்கு வந்தவுடனே, அவர்களின் செலவுக் கணக்கு தொடங்கி விடும். ஆனால், இன்ஸ்பூர் நிறுவனத்தின் பொறியியலாளர்கள், ஒரு நிறுவனத்திலேயே தங்கி சேவை புரிவார்கள். ஜிம்பாபுவேயின் திட்டப்பணி, கடந்த 4 ஆண்டுகளில் இயங்கி வருகின்றது. நமது பொறியியலாளர்கள் தொடர்ந்து அங்கே தங்கி, உதவி அளித்து வருகின்றனர். பிரச்சினை இருந்தால், உடனடியாக அதற்கான சேவையை அளிப்பர் என்றார் அவர்.
சீனாவின் தனிச்சிறப்பு சேவையில் உருவாக்கப்பட்ட ஜிம்பாபுவேயின் வரி வசூலிப்பு தகவல் அமைப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது. வரியேய்ப்பு பிரச்சினையை இவ்வமைப்பு வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது. தனிச்சிறப்பு மிக்க சேவை புரிவதன் மூலம், இன்ஸ்பூர் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)