சீன அரசுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கும் இடையேயான ஒத்துழைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் 2ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும், சீனாவிற்கு வந்துள்ள அந்நாட்டு வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சர் அப்துல்லா பின் சாயிட் அல் நுஹய்யானும் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
கூட்டத்தில், 7 முக்கிய துறைகள் குறித்த சீனாவின் ஒத்துழைப்பு ஆலோசனைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. எண்ணெய், எரிவாயு அகழ்வு மற்றும் உற்பத்தி, துறைமுக கட்டுமானம், தொழில் பூங்கா கட்டுமானம் ஆகிய நெடுநோக்குத்தன்மை வாய்ந்த திட்டப்பணிகளை முன்னெடுக்க இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. இத்துழைப்பு பற்றி, வாங் யீ கூறியதாவது
அணு மின்சாரம், தூய்மையான எரிசக்தி, வான் மற்றும் விண்வெளி ஆய்வு போன்ற தொலைநோக்குப் பார்வையிலான புதிய துறைகளுக்கான ஒத்துழைப்புகள் பற்றி நாம் விவாதிக்கின்றோம். சீனாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையேயான ஒத்துழைப்பு துறைகள் பரந்ததாக உள்ளன. அதன் எதிர்காலம் ஒளி மிக்கதாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.
சீனாவுடனான ஒத்துழைப்புக்கு முன்னுக்கு கொண்டு வருவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகவும் எதிர்பார்ப்பதாக, அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது
சீனாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாம் பாடுபட்டு வருகின்றோம். ஒரே சீனா என்ற கொள்கையை நாம் உறுதியாக ஆதரித்து வருகின்றோம். பல்வேறு துறைகளில் சீனாவுடனான பன்முக ஒத்துழைப்புறவை மேம்படுத்த வேண்டும் என்றும் சீனாவுடனான வர்த்தகப் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் நாம் தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து கருத்து ஒற்றுமையை எட்டியுள்ளதோடு, மக்களிடையேயான தொடர்பு, இரு நாட்டுறவிலுள்ள முக்கிய உள்ளடக்கமாகும் என்றும் இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன. எனவே, கல்வி, பண்பாடு, இளைஞர் ஆகிய துறைகளிலான பரிமாற்றத்தை நெருக்கமாக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.
தவிரவும், பிரதேச மற்றும் உலகின் முக்கிய பிரச்சினைகளைக் கையாளும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகிய விவகாரங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.