ஜியாங்சி மாநிலத்தின் கான்சோ பகுதியில், உள்ளூர் மக்கள் பாரம்பரிய டிராகன் படகு போட்டி மூலம் துவன் வூ திருவிழாவை நினைவுகூர்கின்றனர். அமைதியான வாழ்க்கை மற்றும் நல்ல காலநிலை மீதான பொது மக்களின் எதிர்பார்ப்பை ஆர்ப்பரிக்கும் முரசொலி வெளிப்படுத்துகிறது.
பாரம்பரிய பண்பாட்டின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொள்வதுடன், 3 நாட்கள் நீடிக்கும் இந்த விடுமுறையில் சுற்றுலா செய்வதும், பொது மக்களுக்கு மிகவும் பிடித்ததாகும். தேசிய சுற்றுலா தரவு மையத்தின் புள்ளிவிபரங்களின்படி, இவ்விடுமுறையில் சுற்றுலா சந்தை 8 கோடி பயணிகளை வரவேற்கும். உள்நாட்டு சுற்றுலா வருமானம் 3300 கோடி யுவானை எட்டும். மேலும், சுமார் 50 விழுக்காட்டு மக்கள் நகரப்புறத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். விலங்கியல் பூங்கா, கேளிக்கை பூங்கா, நாட்டுப்புற சுற்றுலா, இயற்கைச்சூழலில் பயணம் உள்ளிட்டவை, மிகவும் வரவேற்கப்படும் வகைகளாகும் என்று ஆய்வின் முடிவு காட்டுகிறது.
இருப்புப்பாதை வாரியத்தின் மதிப்பீட்டின்படி, 27 முதல் 30ஆம் நாள் வரை, இருப்புப்பாதை மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்தை எட்டும். அவர்களில் பெரும்பாலானோர் குறுகிய தூரப் பயணம் மேற்கொள்ளவும், உற்றார் உறவினர்களைச் சந்திக்கவும் உள்ளனர். இருப்புப்பாதை போக்குவரத்து திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு இடங்களின் இருப்புப்பாதை பணியகங்கள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
பயணிகளின் பயணத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், 22 ஜோடி சாதாரண தொடர்வண்டிகளையும் 41 ஜோடி தற்காலிக தொடர்வண்டிகளையும் அதிகரித்துள்ளோம். உச்ச நிலையில் 5 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இது சாதாராண நாட்களில் இருப்பதை விட ஒரு லட்சம் அதிகம் என்று நான்சாங் இருப்புப்பாதை பணியகத்தின் பயணியர் பிரிவு துணைத் தலைவர் கூறினார்.
தவிரவும், இந்த விடுமுறையின் போது வானிலை சிறப்பாக உள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல வானிலை நிலவுவதால், சுற்றுலாவுக்குப் பொருத்தமாக உள்ளது.(வான்மதி)