ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவும், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இன்று திங்கள்கிழமை பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இப்பயணம், ஷிச்சின்பிங் இவ்வாண்டு மேற்கொண்டுள்ள 4ஆவது வெளிநாட்டுப் பயணமாகும். இது, சீன-ரஷிய உறவு, சீன-ஜெர்மனி உறவு, சீன-ஐரோப்பிய உறவு ஆகியவற்றை ஆழப்படுத்துவதற்கும், உலகப் பொருளாதார நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இப்பயணத்தில், ஷிச்சின்பிங்கிற்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதினுக்கும் இடையே மீண்டும் சந்திப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு, மே திங்கள் பெய்ஜிங்கில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்திலும், ஜுன் திங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டிலும் இரு தரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-ரஷிய அரசுத் தலைவர்களிடையேயான இந்த தொடர்ச்சியான சந்திப்புகள் பற்றி சீன சர்வதேச விவகார ஆய்வு நிறுவனத்தின் ஐரோப்பிய-ஆசிய ஆய்வகத்தின் தலைவர் சென் யூரோங் பேசுகையில்,
அரசுத் தலைவர்களுக்கிடையே இந்த தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்பு, இரு நாட்டுறவு நெருக்கமாகி வருவதன் முக்கிய அறிகுறியாகும். இது சீன-ரஷிய உறவை நேரடியாக ஊக்குவிக்கும். சீன-ரஷிய பன்முகமான நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டுறவு, இன்றைய புதிய ரக பெரிய நாட்டுறவின் முன்மாதிரியாக விளங்குகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானதல்ல என்ற நிலையிலும் இரு நாடுகள் ஒன்றுக்கொன்று நன்மை கொண்டு பொது பயன் பெறும் அடிப்படையிலும் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகிறது என்றார்.
ரஷியாவில் பயணத்தை முடித்துக் கொண்டு, ஷிச்சின்பிங்க ஜெர்மனியில் தனது பயணத்தைத் தொடர்வார். சீன அரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு அவர் ஜெர்மனியில் 2ஆவது முறையாக பயணம் மேற்கொள்கிறார். இப்பயணம், சீன-ஜெர்மனி உறவு மற்றும் சீன-ஐரோப்பிய உறவை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமானது என்று சீன சர்வதேச விவகார ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் ருவன் சோங்சேய் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
தற்போது, ஐரோப்பா, மிகவும் முக்கிய தருணத்தில் இருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்தது, ஐரோப்பாவின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தவிர, அரசுக் கடன் நெருக்கடி, பாதுகாப்பு நெருக்கடி, அகதி நெருக்கடி, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்டவை அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்நிலையில், சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜெர்மனி விரும்புகிறது. அமெரிக்காவின் புதிய அரசு ஏற்ப்பட்ட பிறகு உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதால், சீனாவுக்கும் ஜெர்மனிக்கு இடையே நெடுநோக்கு கலந்தாய்வை வலுப்படுத்தும் தேவை உள்ளது. சீன-ஜெர்மனி உறவின் வளர்ச்சி, இரு தரப்புறவு மட்டுமல்லாமல், ஐரோப்பிய-சீன உறவையும் மேம்படுத்துவதாக அமையும்.
மேலும், ஜெர்மனியில் ஹாம்பர்க்கில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும்போது, உலகப் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு குறித்து முக்கிய உரையாற்றுவார். பல்வேறு தரப்புகள், கொள்கை ரீதியான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வலிமை, தொடர்ச்சி, சமநிலை, அனைவரையும் உள்ளிடக்கிய உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அவர் முன்மொழிவு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.