2012ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாள் இயங்க துவங்கிய ஹார் பின்-தா லியன் உயர் வேக இருப்புப் பாதை, உலகின் முதல் குளிர் பிரதேச உயர் வேக இருப்புப் பாதையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பயன்பாட்டுக்கு வரத் துவங்கிய 4 ஆண்டுகாலத்தில், இப்பாதையில் 3 இலட்சத்து 10 ஆயிரம் முறை உயர் வேக தொடர் வண்டிகள், இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 கோடி பயணியர்கள் பயணித்துள்ளனர். பயணம் செய்யும் பயணியர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டில் அதிகரித்து வருகின்றது.
சீனாவின் மிக வட பகுதியில், குளிர் பகுதியிலுள்ள வரையறையின் படி வடிவமைத்த முதல் உயர் வேக இருப்புப் பாதை இதுவாகும். குளிர் பகுதியிலுள்ள உறை நிலத்தைக் கடந்த உயர் வேக இருப்புப் பாதை இது ஒன்றேயாகும். பூச்சியத்துக்கு கீழ் 50 திகிரி செல்சியஸில் கூட இவ்விருப்புப் பாதை இயங்க முடியும். சீனாவின் ஹெ லுங் ச்சியாங் மாநிலத்தின் தலைநகர் ஹார் பின்னிலிருந்து, லியாவ் நிங் மாநிலத்தின் தா லியன் நகருக்குச் செல்லும் இந்த இருப்புப் பாதை, சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மூன்று மாநிலங்களை இணைக்கிறது. இப்பரிதேசங்களுக்கு இடையிலான பயண நேரத்தை இது பெருமளவில் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உறைப் பகுதியில் இயங்கும், இவ்விருப்புப் பாதையின் வடிவமைப்பு மற்றும் கட்டியமைப்பு பணியில், நிறைய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வடிவமைத்த போது, உறை நிலத்தின் பாதிப்பைக் குறைக்கும் வகையில், இவ்விருப்புப் பாதையின் 72 விழுக்காடான பகுதி, பாலங்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கட்டியமைக்கப்பட்ட பாலங்களின் நீளம் 663 கிலோமீட்டராகும்.
உறை பகுதியில் கட்டியமைக்கப்பட்ட முதல் உயர் வேக இருப்புப் பாதையாக இருப்பதால், இயங்கிய துவக்கத்தில், இப்பாதையில் உயர் வேக தொடர் வண்டிகள், குளிர் காலத்தில் மணி நேரத்துக்கு 200 கிலோமீட்டர் வேகத்திலும், கோடை காலத்தில் மணி நேரத்துக்கு 300 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் முதல், மணி நேரத்துக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடத் துவங்கியது.
சீன பொருளாதார வளர்ச்சிக்கு பெரியளவில் துணை புரியும். இந்த இருப்புப் பாதை, சீனாவின் வடக்கிழக்கு பகுதியிலுள்ள பொருளாதாரத்தை முன்னேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)