சீன அரசவை அளித்த பொறுப்பை ஏற்று, சீன தேசியக் கணக்குத் தணிக்கை பணியகத்தின் தலைவர் ஹு சே ச்சுன், 2016ஆம் ஆண்டு சீன நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு திட்டம் பற்றிய கணக்குத் தணிக்கை நிலைமையைச் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியிடம் அளித்தார்.
ஹு சே ச்சுன்னின் கணக்குத் தணிக்கை அறிக்கையின் படி, 2017ஆம் ஆண்டு மார்ச் திங்களுக்குள், கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட 16 மாநிலங்கள், 16 நகரங்கள், 14 மாவட்டங்கள் ஆகியவற்றின் அரசாங்கங்களின் கடன், சரியான அளவில் இருக்கின்றது. சில இடங்களில் கடன் வேகமாக அதிகரித்து வருகின்றது. வேறு சில இடங்களில் அரசாங்கங்கள், வரையறையை மீறி, கடனை வெளியிட்டன. அதிகரித்துள்ள கடன், சமூகப் பணி வளர்ச்சியிலும் பொது மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த கடன் தொகை, உள்ளூர் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. மாநில அரசாங்கங்களின் கடன் விகிதம் 70 விழுக்காடாகும். உலகின் இதர நாடுகளின் விகிதத்தை விட இது குறைவானது என்று சீன தேசியக் கணக்குத் தணிக்கைப் பணியகத்தின் தொடர்புடைய அதிகார் ஒருவர் தெரிவித்தார்.
பொதுவாக உலகின் இதர நாடுகளின் அரசு கடன் விகிதம் 100 முதல் 150 விழுக்காடு வரை உள்ளது. சீனாவின் மாநில அரசு கடன் விகிதம், உலகளவில் ஒப்பிடுகையில் குறைவானது என்று சீன நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு கடன் அளவு பற்றிய கட்டுப்பாட்டில் சீன அரசு உயர்வாக கவனம் செலுத்துகின்றது. மாநில அரசாங்கங்கள் கடனை வெளியிடும் அமைப்பு முறையை நடுவண் அரசு மேம்படுத்தியுள்ளது. மாநில அரசாங்கங்களின் கடன் அதிகரிக்கும் வேகமும் சரியாக்க் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று சீன தேசியக் கணக்குத் தணிக்கைப் பணியகத்தின் தொடர்புடைய அதிகார் ஒருவர் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டில் சீன பொருளாதார வளர்ச்சி, உட்புற வெளிப்புற சிக்கல்களை எதிர்நோக்கிய போதிலும், பொருளாதார வளர்ச்சி நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் 6.7 விழுக்காடாகும். 2016ஆம் ஆண்டு சீன வரவு செலவு திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டது. நடுவண் அரசு பொது வரவு செலவு திட்டத்தின் செலவுத் தொகை 4.4 விழுக்காடாக அதிகரித்து, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிந்தது என்று 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(கலைமணி)