• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க உறவின் ஆக்கப்பூர்வ முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தும் பேச்சுவார்த்தை
  2017-07-21 14:56:39  cri எழுத்தின் அளவு:  A A A   
முதலாவது சுற்று சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 20ஆம் நாள் கூறுகையில், இப்பேச்சுவார்த்தை புதுமையான, நடைமுறைக்கு ஏற்ற ஆக்கப்பூர்வப் பேச்சுவார்த்தையாகும் என்று தெரிவித்தார். சில நிபுணர்கள் சீன வானொலியின் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், இருநாடுகள் கருத்துவேற்றுமையை கட்டுப்படுத்தவும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் இப்பேச்சுவார்த்தை துணைபுரியும் என்று குறிப்பிட்டனர்.

சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதார அமைப்பு முறையை உருவாக்குவது, இருநாட்டு அரசுத் தலைவர்கள் சந்திப்பின் போது எட்டப்பட்ட முக்கிய சாதனையாகும். நடப்புப் பேச்சுவார்த்தையில், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு மேற்கொள்ள இருதரப்பும் உடன்பட்டுள்ளன. இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சீனத் துணை நிதி அமைச்சர் சூ குவாங்யௌ கூறுகையில், இருநாடுகளிடையேயான வர்த்தக சமமின்மை பிரச்சினையைச் சீராகத் தீர்க்கும் பொருட்டு, சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைப்பது அல்லது நிறுத்துவதற்குப் பதிலாக, சீனாவுக்கான ஏற்றுமதியை அமெரிக்கா அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் இருதரப்புறவில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து, இருதரப்புறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக இப்பேச்சுவார்த்தை வெளிக்காட்டியுள்ளது என்று பெய்ஜிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் லூ ஃபெங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது—

மர்-அ-லகோ சந்திப்புக்குப் பின் சீன-அமெரிக்க உறவின் ஆக்கப்பூர்வ முன்னேற்றப் போக்கை இப்பேச்சுவார்த்தை நிலைநிறுத்தியுள்ளது. புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் சீனாவும், வளர்ந்த நாடான அமெரிக்காவும் புதிய சூழலில் பல புதிய உறவுகளைக் கையாள வேண்டும். இப்பேச்சுவார்த்தையைத் தவிர, இருநாடுகளிடையே நெடுநோக்கு மற்றும் பொருளாதாரப் பேச்சுவார்த்தை 8 முறை நடைபெற்றுள்ளது. நெருக்கடி காலத்தில் இருநாட்டுறவின் வளர்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு இது துணைபுரியும் என்று அவர் தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் உறுதியற்ற காரணிகள் அதிகரித்து, வர்த்தக பாதுகாப்பு வாதம் தலைதூக்கும் பின்னணியில், நடப்புப் பேச்சுவார்த்தை, எதிர்கால சீன-அமெரிக்க ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுடன், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் உலகப் பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வகத்தின் தலைவர் சாங் யூயான் குறிப்பிட்டார்.

நடப்புப் பேச்சுவார்த்தையில், ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, நிதி கண்காணிப்பு மற்றும் நிதி சந்தை வளர்ச்சித் துறையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது, ஜி20 அமைப்பு உள்ளிட்ட உலகப் பொருளாதார மேலாண்மை மேடைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சர்வதேச பொருளாதார மற்றும் நிதி அமைப்பு முறை சீர்திருத்தத்தை முன்னேற்றுவது, உலகப் பொருளாதாரத்தின் வலிமைமிக்க தொடரவல்ல சமமான வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை குறித்து இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040