புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில் வளர்ச்சித் திட்டத்தை, சீனா அண்மையில் வெளியிட்டுள்ளது. இது, சீனாவின் முதல் செயற்கை நுண்ணறிவுத் திட்டமாகும். மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தில், மூன்று கட்டங்களான வளர்ச்சி இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2030ஆம் ஆண்டு வரை, உலகின் செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதுமையாக்கம் செய்யும் முக்கிய மையமாக மாற சீனா பாடுபடும்.
முதல் கட்டத்தில், 2020ஆம் ஆண்டு வரை சீனாவின் செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஒட்டுமொத்த தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடு, உலகின் முன்னிலையைப் பின்பற்ற வேண்டும். இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு தொழில்,சீனப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய தோற்றமாக இருக்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில், 2025ஆம் ஆண்டு வரை, சீனாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளின் சில பகுதிகள், உலகின் முன்னிலையை எட்டுவதோடு, அது, சீனாவின் பல்வேறு தொழில்களின் மேம்பாட்டையும் பொருளாதாரக் கட்டமைப்பின் மாற்றத்தையும் முன்னெடுக்கும் முக்கிய உந்து சக்தியாக இருக்க வேண்டும். மூன்றாம் கட்டம், 2030ஆம் ஆண்டு வரை, சீனாவின் செயற்கை நுண்ணறிவின் அறிவியல், தொழில் நுட்பம், பயன்பாடு ஆகியவை ஒட்டுமொத்தமாக உலகின் முன்னிலையை எட்டுவதோடு, உலகின் செயற்கை நுண்ணறிவு தொழிலும் முக்கிய புதுமையாக்க மையமாக சீனா மாற வேண்டும் என்று இந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.