சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறுவதற்கு முன், பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் 26,27 ஆகிய நாட்களில் தலைநகர் பெய்ஜிங்கில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
வரும் காலத்தில் சீனக் கம்யூனிஸ் கட்சி மற்றும் சீன நாட்டின் முக்கிய கொள்கைகளை அறிந்து கொள்வதற்கான முக்கிய அறிகுறியாக இந்த உரை கருதப்படுகிறது.
சீனக் கம்யூனிஸ் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் புதிய வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளது என்று ஷி ச்சின்பீங் தெரிவித்துள்ளார். சோஷலிசக் கட்டுமானத்தின் துவக்க கட்டத்தில் சீனா உள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்டு, இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உரிய முறையில் கையாண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை நிலைப்பாட்டில் ஊன்றி நின்று செயல்பட வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் அதேவேளையில், சமூகத்தில் ஏற்படும் பல்வகை பிரச்சினைகளைச் சீராக தீர்த்து, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச இலட்சியத்தை மேலும் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மட்டுமல்லாமல், கட்சியின் தத்துவத் துறையில், பார்வையை இடைவிடாமல் விரிவாக்கி, புதிய நிலைமையை ஆய்வு செய்து தொகுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் ஒட்டுமொத்த, நெடுநோக்கு மற்றும் முன்னோட்டமுடைய செயல் திட்டம் ஒன்றை முன்வைப்பது, கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசக் கட்டுமானம், பொது மக்களின் அடிப்படை நலன்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டுக்குள் சீனாவில் குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப பன்முகங்களிலும் கட்டியமைக்க வேண்டும் என்பது முதலாவது நூறாண்டு இலக்காகும். இந்த இலக்கை நனவாக்கிய பிறகு, 2ஆவது நூறாண்டு இலக்கிற்காக அனைத்து சீன மக்களும் பாடுபடுவோம் என்று ஷி ச்சின்பீங் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டுக்குப் பிந்தைய இலக்கை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்தில் கொள்ளத் துவங்கியுள்ளதாக இது காட்டுகின்றது என்று தொடர்புடைய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலியக் கட்டுமானத்தில் நிற்க வேண்டும் என்றும், கட்சியின் திறனை மேம்படுத்தி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை மேலும் வலுவானதாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பீங் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார். (வாணி)