பெய்ஜிங்கின் வடக்குப் பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் நீளத்தில், 74 ஆயிரத்து 700 ஹெக்டர் நிலப்பரப்புடைய செயற்கை காடு அமைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய செயற்கை காடு என்றழைக்கப்பட்ட இக்காட்டின் பெயர் சே ஹன் பா ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் அங்குள்ள மக்கள், பாலைவனமாக இருந்த அப்பகுதியை காடாக மாற்றிய அற்புதத்தை உருவாக்கி, இப்பிரதேசத்தின் பொருளாதார சமூக வளர்ச்சியை முன்னேற்றியுள்ளனர்.
சே ஹன் பா மிக அழகான பகுதியாகும். அங்குள்ள காடு, இயற்கை சுற்றுச்சூழலுக்கு பங்காற்றி வருகிறது. சீன வனத்தொழில் அறிவியல் கழகத்தின் மதிப்பீட்டின் படி, சே ஹன் பா காட்டின் நிலப்பரப்பு 74 ஆயிரத்து 700 ஹெக்டராகும். ஆண்டுதோறும், இக்காடு 13 கோடியே 70 இலட்சம் கனமீட்டர் நீரைச் சேமித்து சுத்தம் செய்கிறது. 7 இலட்சத்து 47 ஆயிரம் டன் கரியமில வாயுவை உள்ளிழுத்து, ஆண்டொன்றுக்கு 20 இலட்சம் பேர் பயன்படுத்தும் அளவிலான பிராண வாயுவை வெளியிடுகிறது.
1962ஆம் ஆண்டு சீன அரசு, சே ஹன் பா பிரதேசத்தில் வன மண்டலம் ஒன்றை அமைத்தது. இப்பிரதேசமானது ஓராண்டின் 7 திங்கள் காலத்தில் பனியுடைய சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டதாகும். குளிர்காலத்தில் மிக தாழ்வான வெப்ப நிலை பூச்சியத்துக்கு கீழ் 43 செல்சியஸ் ஆகும். 369 பேர் உருவாகிய ஆக்கப்பணி அணி, இங்கே வந்து வேலை செய்தனர். முதல் இரு ஆண்டுகாலத்தில், கடினமான இயற்கை சூழலில் நடப்பட்ட செடிகளில் 8 விழுக்காட்டுச் செடிகள் மட்டும் உயிருடன் வளர்ந்தன.
இவ்வளவு கடினமான நிலையில், இவ்வணி, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதுப்பித்து, சிக்கல்களை சமாளித்து, உயர்வானதும் மிக குளிரானதுமான இடத்தில் காட்டை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
சே ஹன் பா, சீனாவின் 10 மிக பெரிய பாலைவனமான ஹுன் சன் தாக் பாலைவனத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இப்பாலைவனம், பெய்ஜிங், தியன் ச்சின் ஆகிய சீனாவின் பெரிய நகரங்களைப் பாதித்து வந்தது. சே ஹன் பா காட்டை உருவாக்கிய பிறகு, இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் 50ஆவது ஆண்டுகளை விட, தற்போது வசந்தகாலத்தில் பெய்ஜிங்கிலுள்ள மணல் பாதிப்பு 70 விழுக்காடு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)