2017ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய பணிக் கூட்டம் சீனாவின் யுன் நான் மாநிலத்தின் குன் மிங் நகரில் துவங்கியது. புள்ளிவிபரங்களின் படி, சீனாவில் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முன் வந்துள்ள தொண்டர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியுள்ளது. இது வரை 12 ஆயிரம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டு முதல் 7 திங்கள் காலத்தில், 2866 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இத்தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 33 விழுக்காடு அதிகரித்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தொழில் நுட்பம் மற்றும் தரம், உலகின் முதல் தரவரிசையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போக்கு முதலியவை முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை, வெளிநாடுகளின் தொடர்புடைய நிபுணர்கள், உயர்வாக பாராட்டினர்.
2015ஆம் ஆண்டு முதல், சீனாவின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்கும், தொண்டர் முறை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் நிலைமையின் படி, சீன நாகரிகத்திற்கிணங்க, உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது பற்றிய, நேர்மையான பணி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்கும் தன்னர்வ தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று சீன தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல திட்ட ஆணையத்தின் அதிகாரி கோ யன் ஹுங் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
சீன உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வளர்ச்சி நிதியத்தின் அழைப்பை ஏற்று, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இத்துறையினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய சீனாவின் சட்டங்கள் விதிகள் வரையறைகள் ஆகியவை, உலக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தானமாகக் கொடுப்பதற்குரிய சரியான கட்டுகோப்பை வழங்குவதாக வெளிநாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது பற்றி சீனா தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, இப்பணிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று நிபுணர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
(கலைமணி)