வெளிநாட்டு முதலீட்டு அதிகரிப்பை ஊக்குவிக்கும் சில நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பைச் சீன அரசவை அண்மையில் வெளியிட்டது. விநியோகத் துறை சீர்திருத்தத்தை ஆழமாக்கி, நிர்வாக ஒழுங்கு முறையை முன்னேற்றி, சேவை சீர்திருத்தத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், சீனாவில் அந்நிய முதலீட்டுச் சூழலின் சட்டமயமாக்கம், சர்வதேச மயமாக்கம் மற்றும் வசதிமயமாக்கத்தை உயர்த்தி, அந்நிய முதலீட்டு அதிகரிப்பை முன்னேற்றி, அதன் பயன்பாட்டு நிலையை உயர்த்த வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் திறப்பு விரிவாக்கம் மற்றும் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாட்டுக் குறைப்பு பற்றி வாங் ஷொவ்வென் கூறுகையில்—
"தாராள வர்த்தக மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை பட்டியலை நாடளவில் பரவல் செய்வோம். சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவு விரிவாகி வருவதை இது காட்டுகிறது. மேலும், இந்த ஆவணத்தில் 12 துறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சிறப்பு மற்றும் புதிய எரியாற்றல் வாகனத் தயாரிப்பு துறையில், வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படும் கட்டுப்பாடு குறைக்கப்படும். அதன் வகிதம் 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்க முடியும்" என்று கூறினார்.
தவிரவும், நிதி ஆதரவு கொள்கையின் உருவாக்கம், இந்த ஆவணத்தில் கவனத்தை ஈர்க்கும் அம்சமாகும் என்று நிதி அமைச்சகத்தின் வரி வசூல் பிரிவுத் தலைவர் வாங் ஜியன்ஃபான் அறிமுகம் செய்தார். உள்நாட்டு முதலீட்டு நிறுவனமோ, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமோ குறிப்பிட்ட வரையறையை எட்டினால் அவற்றின் மீது இந்த ஆவணத்தில் வரி வசூல் தொடர்பாக வகுக்கப்பட்ட 3 கொள்கை விதிகளின் அடிப்படையில் ஒரே மாதிரியான வரி விதிப்பை மேற்கொள்ள முடியும் என்று அவர் விவரித்தார்.
மேலும், உயர் நிலை வெளிநாட்டுத் திறமைசாலிகள் சீனாவில் பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டின் பிற்பாதியில், வெளிநாட்டுத் திறமைசாலிக்கான நுழைவிசைவு நடைமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல வாரியங்கள் இணைந்து இந்த நடைமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன. 50 ஆயிரத்துக்கும் மேலான வெளிநாட்டு திறமைசாலிகள் இதன் மூலம் பயன் பெற உள்ளனர் என்று சீனத் தேசிய வெளிநாட்டு நிபுணர் பணியகத்தின் தலைவர் சாங் ஜியன்குவோ தெரிவித்தார்.
இந்த ஆவணத்தில் 22 நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான கொள்கைகள் வரும் செப்டம்பர் திங்கள் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிய வந்துள்ளது.(வான்மதி)