இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷெக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை பரந்த அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொது அக்கறை வாய்ந்த இரு தரப்பு விவகாரங்கள் பற்றி இரு தரப்பினரும் விவாதித்துள்ளனர். கத்தாரிலுள்ள இந்திய தொழிலாளர்களின் நலன் உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமான இந்திய தொழிலாளர்கள் கத்தாரில் பணியாற்றுகின்றனர் என்று தெரிகிறது.
தற்போது, கத்தாருக்கும் சௌதி அரேபியா முதலிய அரபு நாடுகளுக்கும் இடையே தூதாண்மைத் துறையில் சிக்கில் தொடர்கிறது. இச்சமயத்தில் கத்தார் வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை புதுதில்லி வந்தடைந்தார்.
இந்தியா, கத்தாருடனும் சௌதி அரேபியாவுடனும் நெருக்கமான உறவை நிலைநிறுத்தி வருகிறது. கத்தார், இந்தியாவுக்கு மிக அதிக எரிவாயு விநியோகிக்கும் நாடாகும். சௌதி அரேபியா, இந்தியாவுக்கு மிக பெரிய கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.