சின்ச்சியாங்கின் காஷ் நகரின் தஷ்குர்கன் மாவட்டத்திற்கு சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் அக்சுக்பிங் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் 68 வயதான உய்கூர் இன முதியவர் அய்பெதுரா ஓய்வு நேரத்தில் அக்ரோட் மரக் கரண்டிகளைத் தயாரித்து வருகிறார். இவ்வகை மரக் கரண்டி உள்ளூர் மக்களால் "குசுக்" என அழைக்கப்படுகின்றது. இது, உள்ளூர் மக்களின் சமையல் அறையில் மிகவும் பயன்ப்படும் பொருளாக மாறியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், முதியவர் அய்பெதுரா பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசு என உள்ளூர் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலதிக மக்களுக்கு இந்த கைவினை நுட்பத்தை கற்றுக்கொடுக்க அவரை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் அரசு அவருக்கு 600 முதல் 1000 யுவான் வரை பண உதவி வழங்குகிறது. அய்பெதுரா கூறியதாவது:
"நான் தயாரிக்கும் மரக் கரண்டி ஒன்று 2 யுவானுக்கு விற்கப்படுகிறது. ஆண்டுக்கு 700 முதல் 800 மரக் கரண்டிகள் வரை தயாரிக்கிறேன். அவற்றை விற்பனை செய்தால், 1500 யுவான் சம்பாதிக்கலாம். இக்கைவினை நுட்பத்தை பலரும் கையேற்றச் செய்வதை விரைவுபடுத்துவதற்கு அரசு எனக்கு அதிக ஊக்கம் மற்றும் உதவி வழங்கியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மரக் கரண்டி தயாரிப்பு நுட்பத்தை கையேற்றும் வகையில், மேலதிக இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்" என்றார் அவர்.