ரயில் நிலையத்திலிருந்து நகர் அமைந்துள்ள தொலைவை வைத்து நகரின் வளர்ச்சியை எடைபோடக் கூடாது என்பதற்கு ஹூவய் ஆன் ஒரு சான்று. ஹுவய் ஆன் என்றால் ஹுவய் ஆற்றின் நிரந்தரமான அமைதி என்று சீன மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த நகர், முற்காலத்திலேயே, வெள்ளம் பெருக்கெடுத்தால் அதனை எப்படி தடுப்பது என்ற நுட்பத்தைக் கையாண்டதாக குறிப்புகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
சீனா முன்மொழிந்துள்ள பட்டுப்பாதை திட்டத்தில் முக்கிய நகரமாக விளங்கும் ஹுவய் ஆன், பொருளாதார வளர்ச்சியில் அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. நகரின் பிரதான சாலைகளிலோ அல்லது நகரைச் சுற்றியோ பயணித்தால், தலைநகர் பெய்ஜிங்கில் செல்வது போல உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதற்கான காரணம், நகரில் எழுந்துள்ள விண்ணுயரக் கட்டடங்கள். ஆனால், பெய்ஜிங்கை விட இந்த நகர் பிடிப்பதற்கு அதிக காரணங்களும் உண்டு.
ஜியங்ஸு மாநிலம் அதிக மக்கள் தொகை கொண்டவையாக இருப்பினும், மக்கள் நெருக்கமாக அல்லாமல் பரவி வாழ்ந்து வருவதால் அதிக மக்கள் நடமாடுவதை தெருவில் காண முடியாது. அது ஹுவய் ஆன் நகரிலும் எதிரொலிக்கும். திட்டமிட்டப்பட்டு கட்டப்பட்டுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் காணவே முடியாது. பெரும்பாலும் தெளிவான வானிலையைக் காண முடியும் என்பதால் சுற்றுலாவுக்கு இந்நகர் ஏற்புடையது.